எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Thursday, August 11, 2005

வாஷிங்டன் பன்னாட்டுத்திருக்குறள் மாநாடு - ஒரு பார்வை

வரலாற்று சிறப்புமிக்க பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஜூலை 8-10
நடைபெற்றது. இந்த வாரத்தை மேரிலாந்து மாநில கவர்னர் திருக்குறள் வாரமாக அறிவித்திருந்தது தமிழுக்கும்,
குறளுக்கும் பெருமை தருவதாக அமைந்தது.

ஜூலை 8, வெள்ளிக்கிழமை மாலை வாஷிங்டன் முருகன் கோவிலில் உள்ள அரங்கத்தில் வள்ளுவன் சிலை
திறப்பு நடந்ததிலிருந்து மாநாடு களை கட்டத் தொடங்கியது.

ஜூலை 9 சனிக்கிழமை காலை 9:20 மணியளவில் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப்பெண் தமிழ்த்தாய்
வாழ்த்துப்பாட, மாநாடு துவங்கியது. அடுத்து இந்தியக் குடியரசுத்தலைவர் திரு. அப்துல் கலாம்
அவர்களின் ஒளிப் பதிவு செய்யப்பட்ட வாழ்த்துரை திரையிடப்பட்டது, மாநாட்டிற்கு வந்த அனைவருக்கும்
புத்துணர்வையும் உத்வேகத்தையும் தந்தது. அவர் கோட்டிய,

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்

ஆகிய குறள்களும், எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும், அங்கு முழுமுயற்சியோடு
உழைத்து, வாழும் நாட்டிற்கு முழு மனதுடன் பணிசெய்து நீங்களும் பயனடைய வேண்டும், அந்த நாடும்
பயனடைய வேண்டும் என்பதும் அவர் பேச்சில் முக்கியச் செய்திகளாக் அமைந்தன.

அடுத்து சிறப்பு சொற்பொழிவாளர் முன்னாள் துணைவேந்தர் வ. செ. குழந்தைசாமி அவர்கள் ஆற்றிய
தெள்ளத் தெளிந்த நிரோடை போன்ற சொற்பொழிவு அரங்கத்தில் இருந்த அனைவரது செவிக்கு
சிறந்த விருந்தாக அமைந்திருந்தது. அன்றயதினம் நடந்த சொற்பொழிவுகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே
இருந்ததால் மாநாட்டுக்கு வந்த அனைத்து தரப்பு மக்களும் குறளின் அருமைகளையும், பெருமைகளையும்
அறிய வாய்ப்பளித்தது. குறிப்பாக வெளிநாட்டு வாழ் தமிழ் வம்சாவழிக் குழந்தைகள் பயனடைந்தனர்.

திருக்குறள் மதசார்பற்றது என்று மட்டுமே எண்ணியிருந்த பலருக்கு, திரு. வ. செ. குழந்தைசாமி அவர்கள்
குறளில் மதம் மட்டுமல்ல, பலமுறை மொழி, நாடு, அரசன், வற்றாத ஆறு பற்றி குறிப்பிடும்பொழுதும் எந்த
மொழியினையோ, நாட்டினையோ, அரசனையோ, ஆற்றினையோ குறிப்பாக குறிப்பிடவில்லை என்பது
குறள் உலகப் பொதுமறை என்பதற்கு சான்றாக அமைந்திருக்கிறது என்றார்.

சுமார் 260 ஆய்வுக்கட்டுரைகள் இம்மாநாட்டிற்காக சமர்பிக்கப்பட்டன. அவற்றில், 40 கட்டுரைகள் சிறந்த
ஆய்வாளர்களால், மாநாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன். தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கட்டுரைகளில்
சுமார் 15 கட்டுரைகள் மாநாட்டில் கட்டுரை ஆசிரியர்களால் உரைக்கப்பட்டன.

பல தலைப்புக்களிலும், பல கோணங்களிலும், பலதரப்பட்ட, பலநாட்டு அறிஞர்களுடன் குறளையும் வள்ளுவனையும்
ஒப்பிட்டு அலசப்பட்டன். கலிபோர்னியா மாநிலத்தில் பெர்க்லி பல்கலைகழகத்தின் தமிழ்துறையின்
தலைமை பொறுப்பில் இருக்கும் ஜார்ஜ் ஹார்ட், அவர்கள் நடத்திய " திருக்குறள் இன்றைக்கும்
பொருந்துமா?" என்ற தலைப்பில் நடத்திய விவாத மேடை திருக்குறள் ஏன் இன்றும் போற்றப்படுகிறது
என்பதனை தெளிவாக விளக்கியது.

மரண தண்டனை பற்றி வள்ளுவர் சொல்லிய கருத்துக்கள், தொழில் துறையில் வள்ளுவன் கருத்துக்கள், வள்ளுவனும்
பிளேட்டோவும், வீரமாமுனிவரின் பார்வையில் திருக்குறள், உலக நீதிநூல்களில் திருக்குறளின் இடம்,
வள்ளுவனின் கொள்கைகள் மற்றும் இந்தியச்சிந்தனையிலும் மரபிலும் குறளின் தன்மை, வள்ளுவரின் சான்றோன்,
வள்ளுவனின் மதசாற்பற்ற நிதிநூல், இந்திய இலக்கியப் பிண்ணனியில் திருக்குறள், வள்ளுவர் வகுத்த
கல்விக்கொள்கை, வள்ளுவர் காட்டும் தலையாயக் குறள்கள், வள்ளுவரின் பொருட்பால் கருத்துக்கள், திருக்குறளில் குடி போன்ற தலைப்புகளில் நடந்த சொற்பொழிவுகள் திருக்குறளை பல கோணங்களில் அலசியது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையில் எவ்வகையில் உதவும் என்பதனையும் எடுத்துரைத்தன.

திருக்குறள் மாநாடு உருவாவதற்கு காரணமான, வாஷிங்டன் தமிழ் சங்கத்தால் தொடர்ச்சியாக
இருவாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருக்குறள் ஆய்வுக்கூட்டம் பற்றியும், அது எவ்வ'று நடத்தப்படுகின்றது
என்பது பற்றியும் பேசப்பட்டது. மற்ற தமிழ்ச்சங்கங்களும் இவ்வாறான ஆக்கப்பூர்வமான் ஆய்வுக்கூட்டங்களை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

தன்னார்வங்கொண்ட தமிழிர்களால், தன்னார்வ அடிப்படையில் இம்மாநாட்டு முயற்சி 18 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டு, அனைவரது ஒத்துழைப்ப'லும் வெற்றி-பற்றது என்பதும், குறள் ஆய்வுக்கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகப்பட்டது என்பதும் இம்மாநாட்டின் சிறப்பம்சங்களில் சிலவாகும். மேற்கத்திய உலகுக்கு வள்ளுவம் எடுத்துச்செல்லும் பணியில் ஒரு படி முன்னேறியதற்கு இந்தமாநாட்டின் வெற்றி ஒரு சான்று.

செவிக்குணவில்லாத போழ்து மாநாட்டில் வயிற்றுக்கு மிகச்சிறப்பான முறையில், சிறந்த உணவுகள் ஈயப்பட்டன
என்பதனை அவசியம் சொல்லியே ஆகவேண்டும். செவிக்கும், வாய்க்கும் விருந்து படைத்த இம்மாநாடு
கண்களுக்கும் விருந்தளிக்கத் தவறவில்லை. குறட்பாக்களுக்கு புதுமையான முறையில் 2 மணி நேரம்
பரதத்தில் நாட்டிய நாடகமாக ஆடிய பத்மராஜா சகோதரிகள் பார்வையாளர்கள் அனைவரது
பாராட்டுக்களையும் பெற்றார்கள் என்பதில் ஐயமில்லை. வெள்ளி, சனி மாலை நேரங்களில் அமெரிக்கவாழ்
இளைய தலைமுறையினர் திருக்குறளின் அடிப்படையில் நடத்திய கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் புதுமையானதாகவும், வெகுவாக ரசிக்கத்தக்க வகையிலும் இருந்ததொடு அவர்களுக்கு குறளின்பால் ஆத்மார்த்தமான ஈடுபாடுகொள்ள வழிவகுத்தது என்று சொன்னால் மிகையாகாது.

1 Comments:

Post a Comment

<< Home