எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Monday, August 15, 2005

கோவணக்கதை

திருக்குறள் ஆய்வுக்கூட்டம் இருவாரங்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமைகளில் வாஷிங்டன் வட்டாரப்பகுதியில் நடைபெற்று வருகிறது. 14 ஆகஸ்ட் 2005 அன்று 35வது அதிகாரமான “துறவு” ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, இடையிலே சொல்லப்பட்ட கதையிது.

ஒரு ஊரில் ஒரு சாமியார் இருந்து வந்தார். அவரிடம் இரண்டு கோவணங்கள் இருந்தன. ஒன்று இடுப்பில் இருக்கும் பொழுது மற்றொன்று துவைக்கப்பட்டு காய்ந்து கொண்டு இருக்கும். அந்தக் கோவணத்தை எலி கடித்து விடுவதாக ஒரு பக்தரிடம் குறைபட்டுக்கொண்டு இருந்தர். குறை கேட்ட அந்த பக்தர் சாமியாரிடம், ஒரு பூனை வளர்த்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார். அது கேட்ட சாமியார் பூனை வளர்க்கலானார். எலிகளையெல்லாம் வேட்டையாடிவிட்டபடியால் பூனை பசி தாங்காமல் சாமியாரின் பூசை வேளைகளில் மியாவ் மியாவென்று கத்தித் தொந்தரவு செய்து கொண்டு இருந்தது. பூனையின் பசிக்கு பால் கொடுக்க பசு ஒன்றை பக்தர் தானமாகக் கொடுத்தார். அதில் கிடைத்த பாலை பூனைக்கு சாமியார் கொடுத்து வந்தார். பிறகு சிறிது நாளில், பசுவை சமாளிக்க ஒரு பணிப்பெண் வைக்க வேண்டியிருந்தது. பின்னர் குறுகிய காலத்தில் ஹார்மோன்களின் விளையாட்டால் அப்பணிப்பெண்ணை மணந்து சம்சாரியானார்.

கோவண ஆசையால் சாமியார் சம்சாரியான கதை பற்றறுத்தலின் இன்றியமையாமையை துறவு மேற்கொள்வாருக்கு சொல்வதாக இருந்தது.

நமது ஊரில் சாமியார்கள் தண்டம் (கம்பு) வைத்திருப்பதும், அத்தண்டத்தின் மேல் நுனியில் காவி நிறத்தில் ஒரு துணி முடிந்து வைத்திருப்பதையும் செய்திப்படங்களில் பார்த்திருப்போம். அந்தத் துணி வேறொன்றுமில்லை, சாமியாரின் மாற்றுக்கோவணமே என்ற செய்தியினையும் கூட்டத்தில் தெரிந்து கொண்டேன்.


இந்த அதிகாரத்தின் முதல் குறள்,

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -341

உதடு ஒட்டாத குறள் என்ற சிறப்பினைக் கொண்டது. இது பற்று நீங்கவேண்டும் என்ற காரணத்தால் உதடு ஒட்டாத வகையில் அமைக்கப்பட்டு இருந்தது என்றார்கள்.

கடைசிக் குறள்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. -350 (திருக்குறள்)

இது பற்றற்றான் பற்றினைப் பற்றுக என்பதால், ஒவ்வொரு வார்த்தையும் உதடு ஒட்டும் வகையில் அமைக்கப்பட்டது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.


இங்கு பற்றற்றான் யார்? என்ற கேள்வியும் எழுந்தது. பற்றற்றான், புத்தர், மகாவீரர், ஒரு துறவி அல்லது இறைவன் என்றவகையில் பலரது கருத்துக்கள் இருந்தன.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை -345 (திருக்குறள்)

என்ற குறள், துறவு மேற்கொள்வோர்க்கு உடம்பும் மிகை அதனால் அவர் எந்தப் பற்றும் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியது.


குறளில் மறுபிறவி பற்றி கருத்துக்கள் இருந்தமையால், மறுபிறவி உண்மையிலுமே உண்டா? என்ற கேள்வியும் எழுந்தது. வேறுபட்ட கருத்துக்கள் ஆரோக்கியமான முறையில் மோதின. சுவையான சில கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன்.

மறுபிறவி என்ற கருத்துக்கு ஏதாகிலும் நல்ல நம்பக்கூடிய வகையில் அறிவியல் சார்ந்த சான்று உண்டா என்ற கேள்விக்கு இக்கூட்டத்தில் விடை கிடைக்கவில்லை.

பரிணாமத்தத்துவம் பற்றியும் மாற்றுக்கருத்துகள் அலசப்பட்டன. இன்றைய நிலையில் பரிணாமத்தத்துவம் அறிவியல் ரீதியாக பொய்ப்பிக்கப்படாத வகையிலேயே இருக்கிறது. இதனை தூக்கி நிறுத்தும் வண்ணமாக பல புதிய சான்றுகள் கிடைத்தவண்ணமாகவே இருக்கிறது.

இன்னும் இரண்டு கதைகள் சொல்லப்பட்டன அதனையும் பகிர்ந்து கொள்றேங்க.


-நித்தில்

3 Comments:

  • At Monday, August 15, 2005 10:25:00 PM, Blogger மயிலாடுதுறை சிவா said…

    அன்பு நித்தில்
    இலக்கிய கூட்டம் வரமுடியவில்லையே என்று நினைத்தேன்.
    அதனை எழுதி வீட்டீர்கள். பாராட்டுகள்.
    நிறைய எழுதுங்கள்.
    நன்றி
    மயிலாடுதுறை சிவா...

     
  • At Wednesday, August 17, 2005 8:50:00 PM, Blogger முநி said…

    அன்பு சிவா,
    பாராட்டுக்கு நன்றி! கலந்துகொள்ளும் ஒவ்வொரு ஆய்வுக்கூட்டத்திலும் வெளிப்படும் கருத்துக்களை முடிந்த அளவு எழுத முயற்சிக்கிறேன்.

    அன்புடன்,
    நித்தில்

     
  • At Monday, August 22, 2005 10:55:00 PM, Blogger நந்தன் | Nandhan said…

    nalla pathivu. Thodarnthu ezhuthavum.
    Nandha

     

Post a Comment

<< Home