எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Tuesday, August 30, 2005

மெய்யுணர்தல்

வாஷிங்டன் வட்டாரத்தில் ஆகஸ்டு 27, 2005ல் நடந்த திருக்குறள் ஆய்வுக்கூட்டம் மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தை பல உரையாசிரியர்களின் உரைகளோடு அலசியது. அப்போது அங்கிருந்த பல்துறை வல்லுனர்கள்் தெரிவித்த கருத்துக்கள் பற்றி எழுதுகிறேன்.

உணர்தல் வேறு அறிதல் வேறு. அறிதல் அறிவினாலே அறியக்கூடியது. பசியைப்பற்றி ஒருவன் அறிந்து கொள்ளலாம். ஆனால் பசித்தால்தான் உள்ளபடியே உணரமுடியும். அதனால் இந்த அதிகாரத்தில் சொல்லப்படுவது மெய்யறிதல் மட்டுமல்ல மெய் உணர்தல்.

இந்த அதிகாரத்தில் மட்டுமே வள்ளுவர் உணர்தல் என்ற வார்த்தையை அதிகாரத்தலைப்பில் உபயோகப்படுத்தியிருக்கிறார். மற்ற இடங்களில் குறிப்பறிதல், காலம் அறிதல், செய்நன்றி அறிதல் என்றவகையிலே 'அறிதல்' என்றே அமைந்திருக்கின்றது.

மற்ற தமிழ் இலக்கிய நூல்களிலும் மெய்யுணர்தல் பற்றி ஆசிரியர்கள் சொல்லும்பொழுது அந்த அனுபவத்தை உணர்தல் என்றே சொல்கிறார்கள். எடுத்துக்காட்டாக, திருவாசகத்தில்,

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணர்வே

என்றும்,

தோற்றச்சுடரொளியாய் சொல்லாத நுண்ணுணர்வாய்

என்றும் மாணிக்கவாசகர் சொல்கிறார்.


இந்த அதிகாரத்திலே மெய்ப்பொருள், செம்பொருள் என்று அஃறிணைப் பொருளாகச் சொல்கிறார்.

கடவுள் வாழ்த்து அதிகாரத்திலே இறைவனைப் பற்றிச் சொல்லும் பொழுது வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான் என்றெல்லாம் சொன்ன வள்ளுவர் இங்கே அப்படிச் சொல்லவில்லை.

கடவுள் வாழ்த்தில் உயர்திணை. இங்கே அஃறிணை.

ஆனால், உரை எழுதுபவர்கள் மெய்ப்பொருள் என்றால் கடவுள் என்று சொல்லி சுலபமாக முடிக்கவே முயன்றிருக்கின்றனர்.

மெய்ப்பொருள் என்பதனையே நாம் என்னவென்று ஆராய வேண்டும் என்ற கருத்தும் இக்கூட்டத்தில் எழுந்தது.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. -(திருக்குறள்)

வள்ளுவர், மெய்ப்பொருள் பற்றிச் சொல்லும்பொழுது "எது மெய்ப்பொருள்" என்று சொல்லவில்லை. வழக்கம் போல் எது மெய்ப்பொருள் என்று கண்டுபிடித்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார்.

பல உரையாசிரியர்கள் மெய்யுணர்தல் பற்றிச் சொல்லியிருந்தாலும், திரு எஸ். என். கந்தசாமி என்ற வாழ்ந்துகொண்டு இருக்கின்ற தமிழறிஞர் தன் உரையில் மெய்யுணர்தல் பற்றி சொன்னது ஓரளவு ஏற்புடையதாக இருந்தது. அவர் சொன்னதாவது,

"பொருள்களின் இயல்புகளை ஐயம் திரிபற உள்ளவாறு உணர்ந்து பிறப்பினை நிங்கி வீட்டு இன்பத்தினை எய்துவதற்குரிய வழியினை அறிந்து நடத்தற்கு ஏதுவாகிய தத்துவஞானத்தினை மெய்யுணர்தல் என்பர்"

தத்துவஞானத்தை உணர்வதுதான் மெய்ப்பொருள் என்கின்றார் இவர்.

மெய்ப்பொருள் என்பதனை கடவுள் என்று சொன்னால் உரை எழுத எளிதாகி விடுகிறது.

எப்படி உடற்பயிற்சி செய்யக்கூடிய அனைவரும் தடகள வீரர்களாக மாறவேண்டியதில்லையோ அது போல அறம் சார்ந்து வாழக்கூடிய அனைவரும் துறவறத்தை மேற்கொண்டு மெய்யுணரவேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்தவில்லை என்றும் சொல்லப்பட்டது. துறவறத்தை முழுநேரமாகக் கொண்டிருக்கும் துறவிகளுக்கே இந்த அதிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மெய்யுணர்வு என்று சொல்லக்கூடிய உணர்வினை சிலர் உணர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் மதத்தினைச் சார்ந்தவர்கள் என்று மட்டுமல்லாமல் மதத்தினைச் சாராதவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக மாணிக்கவாசகர், ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைச் சொல்லலாம் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

வெவ்வேறு உரையாசிரியர்கள் “மறுபிறப்பு” என்று வள்ளுவர் சொல்லுவதை எவ்வாறு கையாண்டு இருக்கிறார்கள் என்றும் பார்த்தோம். நாத்திகவாதி உரையாசிரியர்களில் சிலர் மறுபிறப்பை மழுப்பியிருந்தார்கள். சிலர் ஒத்துக்கொண்டு இருந்தார்கள். ஆத்திகவாதிகள் அவர்கள் சேர்ந்த மதம் சார்ந்து விளக்கியிருந்தார்கள்.

இந்த அதிகாரத்தில், இப்படிச் செய்தால் இப்படி ஆகலாம் என்றும், மெய்ப்பொருள் காணவேண்டும் என்றும் வள்ளுவர் சொல்கிறாரேயொழிய இப்படிச் செய்ததால், இப்படி ஆகியிருக்கிறார்கள், இப்படி சிலர் மெய்ப்பொருள் கண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று எங்கேயும் சொல்லியிருக்கக் காணோம்.

வள்ளுவர் சொல்லியிருக்கும் மறுபிறப்பு உண்மையிலுமே உண்டா? மரணத்திற்கு அருகே சென்று வந்தவர்களின் அனுபவம் என்று பலவிதமாக விவாதங்கள் சென்றன. கூட்டத்திற்கு வந்திருந்த இரண்டு மருத்துவர்களிடமும் இக்கேள்விகள் கேட்கப்பட்டன.

மரணத்திற்கு அருகே சென்று வந்தவர்கள், ஒளிவெள்ளத்தைப் பார்த்தாகச் சொல்லுகிறார்களே? என்று கேட்டார் ஒருவர்.

ஆமாம், ஆபரேஷன் தியேட்டரில் அவர்கள் கடைசியாகப் பார்த்தது அந்த அறையிலிருந்த அபரேஷன் லைட்டாகத்தான் இருக்கும். அதுவே அவர்கள் நினைவிலும் இருந்திருக்கும். இருட்டறையில் அந்த மரண அனுபவத்தைப் பெற்றிருந்தால் எப்படியிருந்திருக்குமோ? என்றார் இன்னொருவர்.

மொத்தத்தில், வலுவான எந்த ஒரு சான்றும் இல்லாததால் இந்த மறுபிறப்பு விஷயம் ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது.

-நித்தில்

2 Comments:

  • At Tuesday, August 30, 2005 9:26:00 PM, Blogger Thangamani said…

    தொடருங்கள். நன்றி!

     
  • At Wednesday, August 31, 2005 9:59:00 PM, Blogger -/சுடலை மாடன்/- said…

    நித்தில்,

    இந்த மெய்ப்பொருள் கூட்டத்தைத் தவறவிட்டேன். விவாதத்தை நீங்கள் அருமையாகச் சொல்லி வருகிறீர்கள், பாராட்டுக்களும், நன்றிகளும்.

    தொடர்ந்து திருக்குறள் கூட்ட விவாதத்தை எழுதி வாருங்கள்.

    நன்றி - சொ. சங்கரபாண்டி

     

Post a Comment

<< Home