எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Tuesday, September 13, 2005

சின்ன சின்ன ஆசை . . . சரியா? (தொடர்ச்சி)

தூய்மை என்பது அவா இன்மை. அத்தூய்மை வேண்டுமெனில் வாய்மையுடன் இருக்க வேண்டுமென்று வள்ளுவர் அடுத்த குறளில் கூறுகிறார்.

இப்படி வாய்மை பற்றி பேசும் பொழுது அரிச்சந்திரன் பற்றி பேச்சு எழுந்தது. அரிச்சந்திரன் ஒரு வேளை வள்ளுவர் வழியில், பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின், என்கிறபடியாக நடந்திருந்தால் சந்திரமதி கஷ்டப்பட்டிருக்கமாட்டாளோ என்று தோன்றியது.

அடுத்த குறளில், அறவழியில் நடக்க வேண்டுமென்றால் ஆசைக்கு அச்சப்படு என்கின்றார். இதே போன்ற கருத்தை அறிவுடைமை அதிகாரத்தில் ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ என்றும் சொல்கிறார்.

அடுத்த குறளின் பொருளான ‘அவாவினை முழுவதுமாக விலக்கினால் தவறாமல் நல்லவினை நாம் விரும்பிய வழியிலே வரும்’ என்பதனைப் பொருள் கொள்ளும்பொழுது சிறிது குழப்பம் ஏற்பட்டது.

அப்போது அன்பர் ஒருவர்,
இப்படி பல உரையாசிரியர்கள் பல வகையில் உரையெழுதுவதால் நாம் அதைப் படித்துக் குழம்புகிறோம். இதனைத் தவிர்த்திருக்க வள்ளுவரே விளக்கமாக ஒரு ஸ்டடி கைடு போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், ஒரு வேளை அப்படி அவர் செய்திருந்தாரேயானல், இந்நேரத்தில் அவர் விளக்கம் பிடிக்காமல் யாரேனும் குறளை அழித்து நமக்குக் கிடைக்காமல் செய்திருப்பர். குறளின் பொதுத்தன்மைதான் அதனை இவ்வளவு காலம் காப்பாற்றியிருக்கிறது என்று சொன்னார்.

அடுத்து வருகின்ற குறளில், ஆசையினை துன்பத்துள் துன்பம் என்கிறார். கூட்டத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் வள்ளுவர் பேரின்பம் பற்றித்தான் இந்த அதிகாரத்திலே பேசுகின்றார் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், இப்படி வேடிக்கையாக பேச்சு போனது.

அப்போ வள்ளுவர் இன்பத்துக்கும் ஆசைக்கும் சம்பந்தமேயில்லை என்கிறாரா? எனக்குப் புரியலையே! நான் கார் வாங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். கார் வாங்கினாத்தானே இன்பம்?

இப்ப பெட்ரோல் விக்கிற விலைக்கு கார் வாங்கினால் துன்பந்தானே? அப்புறம் அதை ஒழுங்காக பராமரிக்க வேண்டும். எல்லாம் சிரமந்தானே?



ஆசையினை வள்ளுவர் கடைசிக் குறளில், அடங்காத இயற்கைத்தன்மை கொண்டது என்கின்றார். அதை அடக்கி விட்டால், பேரா இயற்கை என்ற பேரின்பம் கிட்டும் என்கின்றார்.

சாதாரண மனிதன் ஆசையில்லாமல் வாழ முடியாது. ஆனால், அவன் பேராசை கொள்ளக்கூடாது.

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?

கார் வாங்குவது ஆசை. ஆனால் எந்தக் கார் வாங்குகிறோம் என்பதே அது ஆசையா பேராசையா என்பதைத் தீர்மானிக்கிறது.

இந்தியாவில் கார் வாங்க ஆசைப்படுகிறோமா? அல்லது அமெரிக்காவில் கார் வாங்க ஆசைப்படுகிறோமா? என்பதைப் பொறுத்து இருக்கிறது.

நியுயார்க் மன்ஹாட்டனில் கார் வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோமா? அல்லது சிறு நகரங்களில் கார் வைக்க ஆசைப்படுகிறோமா? என்பதைப் பொறுத்து இருக்கிறது.

இப்படி ஆசையென்பது சின்ன ஆசையா? பேராசையா? என்பது இடம், காலம், பொருள் போன்ற விஷயங்களைச் சார்ந்து இருக்கிறது.

வள்ளுவர் துறவிகளுக்கே ஆசையினை அறவே அறுக்க வேண்டுமென்கிறார். ஆனால் சாதாரண மக்கள் பேராசையல்லாத ஆசை கொள்வதில் தவறில்லை என்றவாறு கூட்டத்தில் சொல்லப்பட்டது.

வள்ளுவரே பொருட்பாலில்,

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்றும்

‘செய்க பொருளை’ என்றும்தானே சொல்கிறார்.


-நித்தில்

1 Comments:

  • At Tuesday, September 13, 2005 10:02:00 PM, Blogger -/சுடலை மாடன்/- said…

    நித்தில்,

    நடந்த விவாதத்தை அப்படியே சுவைபட எழுதியிருக்கிறீர்கள், அருமை.

    வள்ளுவர் இம்மை, மறுமை, ஏழ்பிறப்பு, இவ்வுலகம், அவ்வுலகம் என்று ஆங்காங்கே சில குறள்களில் சொல்லியிருப்பது உண்மைதான். ஆனால் அவற்றை அவ்வாறான மதக்கருத்துக்களுக்கு உடன்பாடாக வெளிப்படுத்துவதை விட, கருத்தாக்கங்களின் அடிப்படையில் வரையறுக்கப் பட்ட வெறும் பொருள்களைப் பயன்படுத்தி தன் நற்கருத்துக்களை வலியுறுத்துவதற்காகவே பெரும்பாலும் பயன்படுத்தியிருக்கிறார் என நினைக்கிறேன். உதாரணமாக, "கலிபோர்னியாவில் நான் வசித்த இடம் சொர்க்கலோகம் போல் இருந்தது" என்று ஒருவர் கூறுவதால் அவர் சொர்க்கம் என்ற கருத்தில் நம்பிக்கையுடையவர் என்று சொல்ல முடியாது. நாத்திகர்களே கூட அவ்வார்த்தைகளை மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துவதுண்டு.

    ஆனால் வள்ளுவர் குறிப்பிடாத இடங்களில் கூட, மேலுலகத்தையும், மறு பிறப்பையும் சும்மா இழுத்து வந்து வள்ளுவர் நம்பிக்கை அடிப்படையில் குறிப்பிடுவது போல மதநம்பிக்கை கொண்ட உரையாளர்கள் சித்தரிக்கின்றனர். இது ஒரு புறமிருக்க, இன்னொரு பக்கத்தில் மதநம்பிக்கையற்ற உரையாளர்களோ வள்ளுவர் பெயர்ச் சொற்களாகப் பயன்படுத்தியிருக்கும் பதங்களையும் தவிர்த்து, அவற்றுக்குப் பதிலாக தாங்களாக வேறு சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    இவற்றையெல்லாம் தவிர்த்து பேராசிரியர் வ. சுப. மாணிக்கம் குறிப்பிடும் 'வள்ளுவரின் நெஞ்சத்தை' (முனைவர். பிரபாகரன் மேற்கோள் காட்டியது) அறிய இந்த குறள் வாசிப்பு மிகவும் உதவுகிறது.

    நன்றி - சொ. சங்கரபாண்டி

     

Post a Comment

<< Home