எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Sunday, October 23, 2005

அறத்துப்பாலில் - அறமே செய்யாவிட்டாலும் . . .

இப்படி குறட்பாக்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது வேறு சில குறள்களில், அறமே செய்யாவிட்டாலும் பரவாயில்லை இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யாதீர்கள் அல்லது செய்யுங்கள் என்று சில காரிங்களைப்பற்றி சொல்கிறார். அந்தக் குறள்கள் என்னவென்று பார்ப்போமா?

இங்கே வள்ளுவர் சொல்லும் காரியங்களும் அறம்தான். ஆனால், இக்காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே இப்படிச் சொல்லியிருக்கிறார் என்றே கருதுகிறேன். ஆனாலும், இக்குறட்பாக்களை வித்தியாசமான சுவையுடன் நோக்க “அறம் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஆனால் இதைச் செய்யாதீர்கள்” என்ற கண்ணோட்டத்துடனே பார்ப்போம்.

பிறன்மனை விழையாமை என்ற அதிகாரத்தில்,


அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. - 150
(திருக்குறள்)

என்று சொல்கிறார். இதேபோல, அறம் செய்யவில்லை என்றாலும்,


புறங்கூறாதீங்க
கோள்மூட்டாதீங்க
வேட்டு வைக்காதீங்க
காலை வாராதீங்க
போட்டுக்கொடுக்காதீங்க
வத்தி வைக்காதீங்க

என்று புறங்கூறாமை அதிகாரத்தில்,

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. - 181
(திருக்குறள்)

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. - 182
(திருக்குறள்)

இன்னொரு குறளில்,

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. - 297
(திருக்குறள்)

என்று சொல்லி, அறம் செய்யாவிட்டாலும் வாய்மையுடன் இருங்கள் என்கின்றார். இப்படி அறத்தைப் பின்தள்ளி வாய்மையை முன் வைத்த வள்ளுவர் இன்னொரு குறளிலே இந்த வாய்மையையே இரண்டாமிடத்திற்குத் தள்ளுகிறார். அப்படி எதைத்தான் வாய்மையைவிடச் சிறந்தது என்று சொல்கிறார்? அந்தக் குறளைப்பார்ப்போம்

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. 323
(திருக்குறள்)

கொல்லாமையைக் கடைபிடியுங்கள். அதோடு அடுத்ததாக வாய்மையினைக் கடைபிடியுங்கள் என்கின்றார்.

பரவாயில்லை! இந்தத் தொகுப்புடனேயே இதையும் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறபடியான குறளும் ஒன்று உண்டு. அது,

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. - 222
(திருக்குறள்)

இங்கு நல்லாறு என்பதை அறவழி என்று எடுத்துக்கொண்டு, நல்லவழியென்றாலும், இரந்து நிற்காதீர்கள். மேலுலகம் இல்லையென்றாலும் ஈதல் நல்லது என்கின்றார். இங்கு ஒரு முரண்பாடு காணப்படுகிறது. இரந்து நின்று எதையும் வாங்காதீங்க என்கிறார். பிறகு, கொடுத்துக்கொண்டிருங்கள் என்றும் சொல்கிறார். வாங்குபவர்கள் இருந்தால்தானே கொடுக்க முடியும். இதற்கு வள்ளுவர் பதிலும் வைத்திருக்கிறார். அது அறத்துப்பாலில் கிடையாது. பொருட்பாலில் இரவு மற்றும் இரவச்சம் என்று இரு அதிகாரங்கள் வைத்து இருக்கிறார். இப்பொழுது அது பற்றி ஆராயாமல், நாம் அடுத்த தொகுப்புக்குப் போகலாம்.

( valluavar - kural - thirukkural )

0 Comments:

Post a Comment

<< Home