எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Sunday, October 23, 2005

அறத்துப்பாலில், எது இன்பம்?

இன்பத்துப்பால் என்று தனியாக எழுதியிருந்தாலும், வள்ளுவர் வேறுவகையான இன்பங்களைப் பற்றி அறத்துப்பாலில் சொல்கிறார். அந்த இன்பங்களைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

எது இன்பம்?

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. - 65.


தம்முடைய மக்களின் உடலைத் தொடுதல் உடலுக்கு இன்பம் தருவதாகும். அம்மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும்.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. - 39.


அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். - 228.


தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன் கண்மை உடையவர் பிறருக்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். - 98.


இனிமையான சொற்களையே பேசினால் அது இம்மை மறுமை இரண்டுக்கும் இன்பம் தருவதாக அமையும்.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. - 94.


யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்கு துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. - 75.


உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு. - 352.


மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம்மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்பநிலையைக் கொடுக்கும்.

இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். - 369.


அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாத துன்பம் கெடுமானால் இவ்வுலகிலும் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

சிற்றின்பம் வெ•கி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். - 173.


அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர் நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். - 156.


தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் மட்டும் இன்பம். ஆனால், பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரையில் புகழ் உண்டு.

1 Comments:

Post a Comment

<< Home