எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Monday, October 24, 2005

வள்ளுவர் அறம், அறவினை போன்றவற்றை வரையறுக்கிறாரா?

வள்ளுவன் அறம், அறநெறி (அறத்தாறு), அறவினை போன்றவற்றை வரையறுத்து இருக்கிறாரா? அப்படி வரையறுத்த குறள்கள் உண்டா? இந்த கேள்விக்கு விடை காணலாம் என்ற எண்ணத்தில் அறத்துப்பால் குறட்பாக்களைப் புரட்டிப்பார்த்தேன். அப்பொழுது என் கண்ணிற்கு புலப்பட்ட குறள்கள் இவை. ஒரே குறளில், அறத்திற்கு முழு definition கொடுத்ததாகத் தெரியவில்லை. அறம் என்ற பரந்துபட்ட சொல்லை இரண்டு வரிகளில் வரையறுத்து விடவும் முடியாதுதான்.


முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். - 93


முகம் மலர்ந்து, மனத்தின் அடி ஆழத்திலிருந்து இனிமையான சொற்கள் சொல்வது அறம் என்கிறார். ஆனால் மனத்தில் அடி ஆழத்திலிருந்து வராத இன்சொல் அறத்தின் பெருமை கொண்டது இல்லை என்பதை,

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். -911 (பொருட்பால்)


என்கிறார்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். - 35


இந்தக் குறளில், பொறாமை, ஆசை, கோபம், இன்னாச்சொல் என்ற நான்கும் இல்லாமலிருப்பது அறம் என்கிறார்.


அறனறிந்து வெ•கா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. - 179


இங்கு, மறைமுகமாக அறம் என்றால் என்ன என்று சொல்கிறார். அறத்தினை அறிந்து பிறர் பொருளை கவர நினையாமல் இருக்கும் அறிவுடையாரிடம் செல்வம் சேரும் என்கிறார்.

அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு. - 288


இவ்வாறு, அளவோடு வாழத்தெரிந்த நெஞ்சத்தை அறமென்று சொல்கிறார்,

அளவோடு வாழத்தெரிந்தவர்களிடத்தில் அவர்கள் மேற்கொண்ட அறஉணர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். அளவுக்கு மீறிய வாழ்க்கையால் திருட நினைக்கிறவர்களுடைய மனத்தில் அந்த உணர்ச்சி மறைந்து விடும் என்கிறார்.


அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அ•தும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. - 49


அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் மற்றவர் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்று என்கிறார் இந்தக்குறளில்,

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற. -34


ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறம, என்ற வகையிலே இந்தக் குறளில் சொல்லியிருக்கிறார்.

அடுத்தாக, அறவினை என்பது கொல்லாமை என்று சொல்கிறவிதமாக,

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும். - 321

என்றும், நல்லாறு (நல்ல வழி) என்பதுவும் கொல்லாமை என்று

நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி. - 324


என்ற குறளில் சொல்கிறார்.

0 Comments:

Post a Comment

<< Home