எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Friday, November 11, 2005

இறைமாட்சி

ஒரு குறிக்கோளை நோக்கி உழைக்கும் பொழுது அதில் ஒரு சிறிய பகுதி வெற்றிகரமாகா முடிந்தால் எப்படி மனது குதூகலமடையுமோ அது போன்ற மகிழ்ச்சியுடன் வாஷிங்டன் வட்டார தமிழ் இலக்கியவட்டம் நவம்பர் 6, 2005 அன்று கூடியது. அறத்துப்பால் அதிகாரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பின்னர், அதற்கு ஒரு மீள்பார்வைக் கூட்டமும் முடித்து மற்றொரு புத்துணர்ச்சியுடன், பொருட்பாலின் முதல் அதிகாரமான் இறைமாட்சியை ஆய்வு செய்தது. அப்பொழுது வெளிப்பட்ட கருத்துக்களில் சிலவற்றை பார்க்கலாம் வாங்க.

பொருட்பால் ஏன் திருக்குறளில் இரண்டாவதாக வைக்கப்பட்டுள்ளது?

வள்ளுவர் கருத்துப்படி, பொருள் சேர்த்தலுக்கு அறமே அடிப்படை என்ற காரணத்தினாலேயே பொருட்பால் அறத்துப்பாலுக்கு அடுத்து வைக்கப்பட்டுள்ளது. பொருளானது அறவழியிலேயே சேர்க்கப்படவேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

பொருட்பாலை wealth என்று மொழிபெயர்ப்பது சரியாகப்படவில்லை என்று முனைவர் வா.செ. குழந்தைசாமி சொல்கிறார். ஆனால், G.U. Pope முதற்கொண்டு S.M. Diaz வரை wealth என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

பொருட்பால் கருத்துக்கள் அரசனுக்கு மட்டுமல்ல, குடியாட்சி நிர்வாகத்துறைக்கும் பொருந்தும்.

கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்திலும் வள்ளுவரின் பொருட்பால் கருத்துக்கள் பல உள்ளன. வள்ளுவர் கௌடில்யர் கருத்துக்களை உள்வாங்கினாரா? அல்லது கௌடில்யர் வள்ளுவர் கருத்துக்களை உள்வாங்கினாரா? அல்லது தனித்தனியாகவே எழுதினரா? என்பது தெரியவில்லை.

ஆனால், அர்த்தசாஸ்திரமும், மாக்கியவெல்லியத்தின் 'பிரின்ஸ்'ம் பல சூழ்ச்சி வழிகளை அரசனுக்கு சொல்கிறது. ஆனால், வள்ளுவமோ அறவழியிலேயே அரசனுக்கு பல கருத்துக்களைச் சொல்கிறது.

'இறு' என்றால் தங்கியிருத்தல் என்று பொருளாம். எங்கும் நிறைந்திருப்பவன் என்ற பொருளிலே 'இறைவன்' என்ற சொல்வந்ததாம்.

பல நாகரிகங்களில், அரசன் என்பவன் கடவுளால் படைக்கப்பட்டவன் அல்லது கடவுள் என்று இருந்தது. ஆனால், வள்ளுவர் கூற்றுப்படி அரசன் என்பவன் முறையாக ஆட்சி செய்தாலே அரசனாகக் கருதப்படுவான். அரசனை இறைவன் என்று சொல்லிவிட்டால் , அவனை குறைசொல்ல முடியாது. ஆனால், வள்ளுவரோ பல இடங்களில், அரசனிடம் குறைகாண முற்படுதலை சுட்டுகிறார்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். - 448
( திருக்குறள ்)

என்றும், இவ்வதிகாரத்திலேயே,

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. - 389 ( திருக்குறள் )


என்றும் சொல்கிறார்.


அரசனுக்குரிய குணங்களாக பல குணங்களை இவ்வதிகாரத்தில் சொல்கிறார். நுணுக்கமாகப் பார்த்தால், அவர் எந்த குணத்தையும் திரும்பச் சொல்லவில்லை என்பது புரியும்.

எடுத்துக்காட்டாக, ஒரு குறளிலே, அஞ்சாமை வேந்தனுக்கு இயல்பாக இருக்க வேண்டுமென்கிறார். அடுத்த குறளிலேயே, துணிவுடைமை அரசனுக்கு வேண்டியது என்கிறார். அஞ்சாமைக்கும், துணிவுடைமைக்கும் வித்தியாசம் உண்டா? ஆம். உண்டு.

உதாரணமாக, நீங்கள் காட்டிலே சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது ஒரு சிங்கம் உங்களைத் தாக்க வருகிறது. அப்பொழுது அதை எதிர்த்துப் போராடினீர்களானால், அது அஞ்சாமை.

அதே நேரத்தில், நீங்களே சிங்கத்தின் குகையினைத் தேடிச்சென்று அதனுடன் போராடினீர்களானால், அது துணிவுடைமை.

அஞ்சாமை - courage
துணிவுடைமை - bravery

ப.சிதம்பரம் அவர்கள் பட்ஜெட் கூட்டத்தில், கோட்டிய குறள்

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. - 385 ( திருக்குறள் )



மேலும்,

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். - 386 ( திருக்குறள ்)


குறளைப் படிக்கும் பொழுது, அன்பர்கள் அப்துல் கலாம். மன்மோகன் சிங், அண்ணாதுரை போன்ற காட்சிக்கெளியோரையும் அவர்கள் அனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டார்கள்.

இன்னொரு நுணுக்கமான வித்தியாசமும் உண்டு. ஈகை என்று ஒரு குறளிலும் கொடை என்று மற்றொரு குறளிலும் வள்ளுவர் அரசனுக்கு வேண்டிய குணமாகச் சொல்கிறார்.

கொடைக்கும் ஈகைக்கும் என்ன வித்தியாசம்?

இந்த கேள்விக்கும் பதில் கிடைத்தது.

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை. (வறியவர்களுக்கு கொடுப்பதே ஈகை)

ஆனால், இருப்பவற்கும் கொடுப்பது கொடை.

ஈகை - Charity
கொடை - Gift

வள்ளுவர் அரசனுக்கு இருக்க வேண்டிய அம்சங்களாக இறைமாட்சி அதிகாரத்திலே சொல்லியிருப்பதை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறேன்.

1. படை (பொதுவாக படை என்று சொல்லியிருக்கிறார்)
2. குடி (குடி மக்கள்)
3. கூழ் (உணவுப் பொருள்கள்)
4. அமைச்சு
5. நட்பு
6. அரண்
7. அஞ்சாமை
8. ஈகை
9. அறிவு
10. ஊக்கம்
11. தூங்காமை (சோம்பலின்மை அல்லது காலம் தாழ்த்தாமை)
12. கல்வி
13. துணிவுடமை
14. அறம்
15. மறம்
16. இயற்றல் ( பொருள் சேரும் வழிகளை இயற்றல்)
17. ஈட்டல் (பொருள்களை ஈட்டுதல்)
18. காத்தல் ( ஈட்டிய பொருளைகளைக் காத்தல்)
19. வகுத்தல் ( காத்த பொருளை சரியாக பங்கிட்டு செலவு செய்தல்)
20. காட்சிக்கு எளியனாக இருத்தல்
21. கடுஞ்சொல் சொல்லாதிருத்தல்
22. இன்சொல் சொல்லி வேண்டியதைக் கொடுத்துக் காத்தல்.
23. முறை செயதல் (நீதி முறை செய்து குடிகளைப் பேணுதல்)
24. செவி கசக்குமாறு தன்னைச் சொல்லும் குறைகளைப் பொறுத்தல்
25. கொடை
26. அளி ( அருள், கருணை )
27. செங்கோல்
28. குடிகளைக் காத்தல்

கூட்டத்தில் இன்னும் நிறையப் பேசப்பட்டது.

-நித்தில்


0 Comments:

Post a Comment

<< Home