எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Friday, November 25, 2005

கல்லாமை பற்றி வள்ளுவர்்

குழந்தைங்க வீட்டுக்குப் பக்கத்தில் கட்டம் போட்டு ஒரு சின்ன சிப்பி அல்லது சில்லு வீசி விளையாடுவாங்க இல்லையா. அங்கே கட்டமோ சில்லோ இல்லைன்னா அவங்களால அந்த விளையாட்டை விளையாட முடியாது. அட! தாயம், பரமபதம், சதுரங்கம்னு இந்த விளையாட்டுக்களை எடுத்துகிட்டாலும் கட்டமும் கருவியும் முக்கியமில்லையா? இதுங்க இல்லாம இந்த விளையாட்டுகளை விளையாட முடியுமா?

வள்ளுவரும் கல்வி கற்காமல் ஒருவன் கற்றவர்கள் முன்னால பேச நினைக்கிறது இப்படி கட்டமும் கருவியும் இல்லாமல் இந்த மாதிரியான விளையாட்டுக்களை விளையாடறது போல அப்படீங்கறாரு. கிட்டத்தட்ட ஆய்வுக்கூட்டத்தில் ஆய்வு செய்ய எடுத்துக்கொண்ட எல்லா உரையாசிரியர்களும் இதே கருத்தைத்தான் கல்லாமை அதிகாரத்தில் வர்ற முதல் குறளுக்கு பொருளா சொல்லியிருக்காங்க.

அடுத்த குறளை வள்ளுவர் கொஞ்சம் ஏடாகூடமாத்தான் எழுதியிருக்காரு. அவர் ஏன் அப்படி எழுதினார்? அவருக்கு வேற உதாரணமே கிடைக்கலையா? அப்படீன்னு அன்பர்கள் பலர் சூடாகவே கேட்டாங்க. ஆனாலும், வள்ளுவர் இப்படி எழுதி வச்சுட்டாரே, அவரையும் கேட்க முடியாது, சரி உரையாசிரியர்கள் அந்த குறளுக்கு என்னதான் பொருளா சொல்லியிருக்காங்கன்னு பாக்கலாம்னு புத்தகங்களைப் புரட்டி பார்த்தாங்க.

கல்வி கற்காதவன் கற்றோர் முன் பேச முற்படுவது மார்பகங்கள் இல்லாத பெண்ணை விரும்புதல் போன்றது அப்படீன்னு பல உரையாசிரியர்கள் சொல்லியிருக்காங்க. மார்பகங்கள் இல்லாத பெண் என்று யாரை சொல்கிறார்கள்ங்கறதுல கருத்து வேறுபாடுகள் இருந்தது. சிலர், அரவாணிகள் அப்படீன்னு சொல்லியிருந்தாங்க. ஆனா, அதற்கு அன்பர்கள் பலர் பரந்த மனப்பான்மையுடன் பல குறள்களை எழுதியுள்ள வள்ளுவர் ஒரு இனத்தைக் குறை கூறுவதுபோல எழுதியிருக்க மாட்டார்ன்னு சொன்னாங்க. மற்ற சில உரையாசிரியர்கள் பருவமடையாத பெண் அப்படீன்னு சொல்லியிருந்தாங்க.

வள்ளுவர் வேற உதாரணம் சொல்லாம, ஏன் இந்த உதாரணம் எடுத்துக்கிட்டாருங்கற கேள்விக்கு, அந்த காலத்துல இது கொச்சையா இல்லாம இருந்திருக்கலாம், இல்லைன்னா இலக்கியத்தில் இது சாதாரணமா இருந்திருக்கலாம், இல்லைன்னா ஆணாதிக்கம் கொண்ட சமுதாய காலகட்டத்துல எழுதப்பட்டதால இப்படி இருந்திருக்கலாம்னும் பலவிதமா கருத்துக்கள் சொன்னாங்க.

அடுத்த குறள்ள, பேசாம இருக்கிறவரைக்கும் படிக்காதவன் பார்ப்பதற்கு படிச்சவன் மாதிரி தெரிவான், அதனால, படிச்சவங்க முன்னால பேசனும்னா படிங்கன்னு மறைமுகமா சொல்றாரு வள்ளுவர்.

ராமர்பிள்ளைன்னு ஒருத்தர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கறதா சொன்ன செய்தி நினைவில் இருக்கும்னு நினைக்கிறேன். அந்த ராமர்பிள்ளையோட மூலிகை பெட்ரோல் ஐடியா இன்னைக்கு பெட்ரோல் விக்கிற விலையில என்னவோ கேட்பதற்கு நல்லாத்தான் இருந்தது. ஆனா படிச்ச விஞ்ஞானிகளுக்கு நடுவுல அவரோட மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் செயல்முறை ஒன்னும் எடுபடுல பாருங்க.

இந்த மாதிரி படிக்காதவன் நல்ல ஐடியாக்களைக் கொடுத்தாலும், அந்த ஐடியாவைப் பத்தி அடிப்படையுடன் சரியா ஒத்துக்கொள்ற மாதிரி விளக்கத் தெரிய வேண்டிய கல்வி இல்லைன்னா, படிச்சவங்க அவனை ஏத்துக்கமாட்டாங்கன்னு 404வது குறள்ள வள்ளுவர் சொல்றாரு.

கூட்டத்தில வானிலை ஆராய்ச்சியாளர் ஒருத்தரும் இருந்தார். அப்ப அவர் - இப்ப ரோட்டுல போற ஒருத்தரு புளாரிடா பக்கத்துல வந்துகிட்டு இருக்கிற புயல், புளாரிடாவுக்கு வராது, நேரா மெக்ஸிகோ போயிடும்னு சொல்லிட்டு அவர் பாட்டுக்கு போயிகிட்டு இருப்பாரு. அவருக்கு வானிலை ஆராய்ச்சி பத்தி ஒன்னும் தெரியாம இருக்கும். ஆனா, சில சமயம் அவர் சொன்ன மாதிரியே புயல் மெக்ஸிகோ நோக்கி போயிடலாம். அதுக்காக, அவரை நல்ல வானிலை ஆராய்ச்சியாளர்ன்னு ஒத்துக்க முடியாது. ஏன்னா அவரால ஏன் மெக்ஸிகோவுக்கு புயல் போச்சுன்னு விளக்க முடியாது. கிட்டத்தட்ட இந்த சூழ்நிலையத்தான் வள்ளுவர் 404வது குறள்ள சொல்றார் அப்படீன்னார்.

கல்லாதவன் பேச ஆரம்பிச்சா கொஞ்ச நேரத்திலேயே அவனுடைய பேச்சில் கல்வி கற்காத காரணத்தால் தொய்வு ஏற்பட்டுவிடும்ங்கறார் வள்ளுவர் அடுத்த குறள்ள.

பேருக்கு இருக்கிறான் என்பது மட்டும்தான், கல்லாதவன் ஒன்றுக்கும் உதவாத களர் நிலம் மாதிரி என்று உரையாசிரியர்கள் 406வது குறளுக்கு பொருள் சொல்லறாங்க. சில உரையாசிரியர்களோ களர் நிலத்தையும், பண்படுத்தினால் பயன் தரும், அதுபோல, கல்லாதவன் கற்றால் தான் பயனடைவதோடு பிறர்க்கும் பயந்தருவான் என்கிறார்கள்.

407வது குறள்ள கல்வி கற்காதவனை நல்ல கலர் சாயமடித்த பொம்மைன்னு வள்ளுவர் சொல்றார்.

நல்ல மனிதன் வறுமைப்படுவதைக்காட்டிலும், மோசமானது, கல்லாதவனிடம் இருக்கக்கூடிய செல்வம் அப்படீன்னு 408வது குறள்ள சமுதாயத்தில் கல்வி கற்க, கற்பிக்கபடனுங்க்கறதுக்கு முக்கியத்துவம் தர்றாரு. ஏன்னா, செல்வம் யார்கிட்ட வேணும்னாலும் போகக்கூடியது. அதனால, கல்லாதவனாக யாரையும் விட்டு வைக்காதீங்க, அப்படி விட்டு வெச்சீங்கன்னா, செல்வம் அவன்கிட்ட போறப்ப உங்களுக்கு சிரமம்னு சமுதாயத்துக்கு சொல்றதாத்தான் நான் நினைக்கிறேன்.

சமுதாய அந்தஸ்துன்னு ஒன்னு இருக்கத்தானே செய்யுது. குடி அப்படீன்னு வள்ளுவர் சொல்றப்ப எல்லாம் அவர் சாதியைப் பத்தி பேசறதா நான் நெனக்கல. ஏன்னா, சமுதாயத்தில் ஒருத்தருக்கு நல்ல தொழிலும், கல்வியும், அதிகாரமும், செல்வமும் இருந்ததுன்னா அவரால அவருடைய குழந்தைகளுக்கும், சொந்தக்காரங்களுக்கும் ஒரு பெருமை வரும். இதைத்தான் குடி பெருமைன்னு வள்ளுவர் சொல்றதா நினைக்கிறேன். இந்த பெருமையைக் காப்பாத்தற மாதிரி மேல சொன்ன எல்லாரும் நடந்துகிட்டாங்ன்னாத்தான் அந்தப் பெருமை நிலைக்கும். (வள்ளுவர் காலத்துல சாதி இருந்திருக்கலாம். ஆனா, அதுக்காக வள்ளுவர் சாதியை எங்கேயும் ஒத்துக்கிட்டதாவோ, ஆதரிச்சதாவோ தெரியல)

இப்படி பெருமை மிக்க குடியில பிறந்தாலும், ஒருத்தன்/ஒருத்தி படிக்கலைன்னா அவன் படிக்காதவந்தான். குடிபெருமை ஒன்னும் அவனைக்காப்பாத்தாது. அதே நேரத்துல இப்படி பெருமையில்லாத குடியில் பிறந்தாலும், ஒருத்தன்/ஒருத்தி நல்லா கல்வி கற்றால், மேன்மை அடைவான்/ள். அதனால், எந்த சூழலில் இருந்தாலும் கல்வி கற்பது முக்கியம்னு 409வது குறள்ள வள்ளுவர் சொல்லறார்.

கடைசிக் குறள்ள ஒரே போடா போட்டுட்டாரு வள்ளுவர். கல்வி கற்கவில்லைன்னா நீ விலங்குக்கு சமானம் அப்படிங்கறாரு.


அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். - 401.

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்காமுற் றற்று. - 402.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். - 403.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். - 404.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். - 405.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். - 406.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று. – 407.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. - 408.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. - 409.

விலங் கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். - 410.

0 Comments:

Post a Comment

<< Home