எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Friday, November 25, 2005

கல்லாமை பற்றி வள்ளுவர்்

குழந்தைங்க வீட்டுக்குப் பக்கத்தில் கட்டம் போட்டு ஒரு சின்ன சிப்பி அல்லது சில்லு வீசி விளையாடுவாங்க இல்லையா. அங்கே கட்டமோ சில்லோ இல்லைன்னா அவங்களால அந்த விளையாட்டை விளையாட முடியாது. அட! தாயம், பரமபதம், சதுரங்கம்னு இந்த விளையாட்டுக்களை எடுத்துகிட்டாலும் கட்டமும் கருவியும் முக்கியமில்லையா? இதுங்க இல்லாம இந்த விளையாட்டுகளை விளையாட முடியுமா?

வள்ளுவரும் கல்வி கற்காமல் ஒருவன் கற்றவர்கள் முன்னால பேச நினைக்கிறது இப்படி கட்டமும் கருவியும் இல்லாமல் இந்த மாதிரியான விளையாட்டுக்களை விளையாடறது போல அப்படீங்கறாரு. கிட்டத்தட்ட ஆய்வுக்கூட்டத்தில் ஆய்வு செய்ய எடுத்துக்கொண்ட எல்லா உரையாசிரியர்களும் இதே கருத்தைத்தான் கல்லாமை அதிகாரத்தில் வர்ற முதல் குறளுக்கு பொருளா சொல்லியிருக்காங்க.

அடுத்த குறளை வள்ளுவர் கொஞ்சம் ஏடாகூடமாத்தான் எழுதியிருக்காரு. அவர் ஏன் அப்படி எழுதினார்? அவருக்கு வேற உதாரணமே கிடைக்கலையா? அப்படீன்னு அன்பர்கள் பலர் சூடாகவே கேட்டாங்க. ஆனாலும், வள்ளுவர் இப்படி எழுதி வச்சுட்டாரே, அவரையும் கேட்க முடியாது, சரி உரையாசிரியர்கள் அந்த குறளுக்கு என்னதான் பொருளா சொல்லியிருக்காங்கன்னு பாக்கலாம்னு புத்தகங்களைப் புரட்டி பார்த்தாங்க.

கல்வி கற்காதவன் கற்றோர் முன் பேச முற்படுவது மார்பகங்கள் இல்லாத பெண்ணை விரும்புதல் போன்றது அப்படீன்னு பல உரையாசிரியர்கள் சொல்லியிருக்காங்க. மார்பகங்கள் இல்லாத பெண் என்று யாரை சொல்கிறார்கள்ங்கறதுல கருத்து வேறுபாடுகள் இருந்தது. சிலர், அரவாணிகள் அப்படீன்னு சொல்லியிருந்தாங்க. ஆனா, அதற்கு அன்பர்கள் பலர் பரந்த மனப்பான்மையுடன் பல குறள்களை எழுதியுள்ள வள்ளுவர் ஒரு இனத்தைக் குறை கூறுவதுபோல எழுதியிருக்க மாட்டார்ன்னு சொன்னாங்க. மற்ற சில உரையாசிரியர்கள் பருவமடையாத பெண் அப்படீன்னு சொல்லியிருந்தாங்க.

வள்ளுவர் வேற உதாரணம் சொல்லாம, ஏன் இந்த உதாரணம் எடுத்துக்கிட்டாருங்கற கேள்விக்கு, அந்த காலத்துல இது கொச்சையா இல்லாம இருந்திருக்கலாம், இல்லைன்னா இலக்கியத்தில் இது சாதாரணமா இருந்திருக்கலாம், இல்லைன்னா ஆணாதிக்கம் கொண்ட சமுதாய காலகட்டத்துல எழுதப்பட்டதால இப்படி இருந்திருக்கலாம்னும் பலவிதமா கருத்துக்கள் சொன்னாங்க.

அடுத்த குறள்ள, பேசாம இருக்கிறவரைக்கும் படிக்காதவன் பார்ப்பதற்கு படிச்சவன் மாதிரி தெரிவான், அதனால, படிச்சவங்க முன்னால பேசனும்னா படிங்கன்னு மறைமுகமா சொல்றாரு வள்ளுவர்.

ராமர்பிள்ளைன்னு ஒருத்தர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கறதா சொன்ன செய்தி நினைவில் இருக்கும்னு நினைக்கிறேன். அந்த ராமர்பிள்ளையோட மூலிகை பெட்ரோல் ஐடியா இன்னைக்கு பெட்ரோல் விக்கிற விலையில என்னவோ கேட்பதற்கு நல்லாத்தான் இருந்தது. ஆனா படிச்ச விஞ்ஞானிகளுக்கு நடுவுல அவரோட மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் செயல்முறை ஒன்னும் எடுபடுல பாருங்க.

இந்த மாதிரி படிக்காதவன் நல்ல ஐடியாக்களைக் கொடுத்தாலும், அந்த ஐடியாவைப் பத்தி அடிப்படையுடன் சரியா ஒத்துக்கொள்ற மாதிரி விளக்கத் தெரிய வேண்டிய கல்வி இல்லைன்னா, படிச்சவங்க அவனை ஏத்துக்கமாட்டாங்கன்னு 404வது குறள்ள வள்ளுவர் சொல்றாரு.

கூட்டத்தில வானிலை ஆராய்ச்சியாளர் ஒருத்தரும் இருந்தார். அப்ப அவர் - இப்ப ரோட்டுல போற ஒருத்தரு புளாரிடா பக்கத்துல வந்துகிட்டு இருக்கிற புயல், புளாரிடாவுக்கு வராது, நேரா மெக்ஸிகோ போயிடும்னு சொல்லிட்டு அவர் பாட்டுக்கு போயிகிட்டு இருப்பாரு. அவருக்கு வானிலை ஆராய்ச்சி பத்தி ஒன்னும் தெரியாம இருக்கும். ஆனா, சில சமயம் அவர் சொன்ன மாதிரியே புயல் மெக்ஸிகோ நோக்கி போயிடலாம். அதுக்காக, அவரை நல்ல வானிலை ஆராய்ச்சியாளர்ன்னு ஒத்துக்க முடியாது. ஏன்னா அவரால ஏன் மெக்ஸிகோவுக்கு புயல் போச்சுன்னு விளக்க முடியாது. கிட்டத்தட்ட இந்த சூழ்நிலையத்தான் வள்ளுவர் 404வது குறள்ள சொல்றார் அப்படீன்னார்.

கல்லாதவன் பேச ஆரம்பிச்சா கொஞ்ச நேரத்திலேயே அவனுடைய பேச்சில் கல்வி கற்காத காரணத்தால் தொய்வு ஏற்பட்டுவிடும்ங்கறார் வள்ளுவர் அடுத்த குறள்ள.

பேருக்கு இருக்கிறான் என்பது மட்டும்தான், கல்லாதவன் ஒன்றுக்கும் உதவாத களர் நிலம் மாதிரி என்று உரையாசிரியர்கள் 406வது குறளுக்கு பொருள் சொல்லறாங்க. சில உரையாசிரியர்களோ களர் நிலத்தையும், பண்படுத்தினால் பயன் தரும், அதுபோல, கல்லாதவன் கற்றால் தான் பயனடைவதோடு பிறர்க்கும் பயந்தருவான் என்கிறார்கள்.

407வது குறள்ள கல்வி கற்காதவனை நல்ல கலர் சாயமடித்த பொம்மைன்னு வள்ளுவர் சொல்றார்.

நல்ல மனிதன் வறுமைப்படுவதைக்காட்டிலும், மோசமானது, கல்லாதவனிடம் இருக்கக்கூடிய செல்வம் அப்படீன்னு 408வது குறள்ள சமுதாயத்தில் கல்வி கற்க, கற்பிக்கபடனுங்க்கறதுக்கு முக்கியத்துவம் தர்றாரு. ஏன்னா, செல்வம் யார்கிட்ட வேணும்னாலும் போகக்கூடியது. அதனால, கல்லாதவனாக யாரையும் விட்டு வைக்காதீங்க, அப்படி விட்டு வெச்சீங்கன்னா, செல்வம் அவன்கிட்ட போறப்ப உங்களுக்கு சிரமம்னு சமுதாயத்துக்கு சொல்றதாத்தான் நான் நினைக்கிறேன்.

சமுதாய அந்தஸ்துன்னு ஒன்னு இருக்கத்தானே செய்யுது. குடி அப்படீன்னு வள்ளுவர் சொல்றப்ப எல்லாம் அவர் சாதியைப் பத்தி பேசறதா நான் நெனக்கல. ஏன்னா, சமுதாயத்தில் ஒருத்தருக்கு நல்ல தொழிலும், கல்வியும், அதிகாரமும், செல்வமும் இருந்ததுன்னா அவரால அவருடைய குழந்தைகளுக்கும், சொந்தக்காரங்களுக்கும் ஒரு பெருமை வரும். இதைத்தான் குடி பெருமைன்னு வள்ளுவர் சொல்றதா நினைக்கிறேன். இந்த பெருமையைக் காப்பாத்தற மாதிரி மேல சொன்ன எல்லாரும் நடந்துகிட்டாங்ன்னாத்தான் அந்தப் பெருமை நிலைக்கும். (வள்ளுவர் காலத்துல சாதி இருந்திருக்கலாம். ஆனா, அதுக்காக வள்ளுவர் சாதியை எங்கேயும் ஒத்துக்கிட்டதாவோ, ஆதரிச்சதாவோ தெரியல)

இப்படி பெருமை மிக்க குடியில பிறந்தாலும், ஒருத்தன்/ஒருத்தி படிக்கலைன்னா அவன் படிக்காதவந்தான். குடிபெருமை ஒன்னும் அவனைக்காப்பாத்தாது. அதே நேரத்துல இப்படி பெருமையில்லாத குடியில் பிறந்தாலும், ஒருத்தன்/ஒருத்தி நல்லா கல்வி கற்றால், மேன்மை அடைவான்/ள். அதனால், எந்த சூழலில் இருந்தாலும் கல்வி கற்பது முக்கியம்னு 409வது குறள்ள வள்ளுவர் சொல்லறார்.

கடைசிக் குறள்ள ஒரே போடா போட்டுட்டாரு வள்ளுவர். கல்வி கற்கவில்லைன்னா நீ விலங்குக்கு சமானம் அப்படிங்கறாரு.


அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். - 401.

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்காமுற் றற்று. - 402.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். - 403.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். - 404.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். - 405.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். - 406.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று. – 407.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. - 408.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. - 409.

விலங் கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். - 410.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Saturday, November 19, 2005

கல்வி பற்றி வள்ளுவர்

கல்வி அதிகாரத்தையும் இலக்கிய ஆய்வுக்கூட்டம் அலசியது. ஒவ்வொரு குறளையும் தனித்தனியாக, பொறுமையாக தெளிவாக ஆய்வு செய்தார்கள். அப்பொழுது கூட்டத்தில் வெளிப்பட்ட கருத்துக்களில் சிலவற்றை இங்கே சுவைக்காக சிறிது மாற்றம் செய்து தொகுத்துக் கொடுக்கிறேன்.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

இந்த அதிகாரத்தில் முதல் குறளை இப்படியும் படிக்கலாம் என்று சொன்னார்கள்.

கற்க கற்க
கற்க கசடற
கற்க கற்பவை
கற்க கற்றபின்
கற்க நிற்க
கற்க அதற்குத் தக

இலக்கண முறைப்படி இல்லாவிட்டாலும், இப்படிப் படிப்பது ஒரு சுவையாகத்தான் இருந்தது.

இங்கேயும் பார்த்தீர்களானால், பொருளாதாரம், வரலாறு அல்லது அறிவியல் என்று இதைப் படி என்று சொல்லாமல், வள்ளுவர் பொதுவாக கற்க கற்பவை என்று சொல்கிறார்.

பேச்சு இப்படி சிறிது நேரம் போனது. அதில் மிகச்சிறிய பகுதி மட்டும்.

ராச்செஸ்டர் பல்கலக்கழத்திலிருந்து கொடுக்கப்பட்ட கல்வித்திட்டப் புத்தகத்தில் “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு” என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதி அதனடியில் அழகாக “அவ்வையார்” என்று எழுதியிருந்ததுங்க.

அனேகமா யாராவது தமிழர் அங்கு இருந்திருப்பார். அவர்தான் இப்படி எழுதச் செய்திருப்பார்.

இப்படிச் செய்தவர் ஒரு மாணவனாகக்கூட இருந்திருக்கலாம்.

ஆமா, இந்த் ஊரிலே, ராச்செஸ்டர் பல்கலைக்கழத்தில் இப்படி எழுதவேண்டும் என்று இல்லையே? எத்தனையோ இது போல் ஆங்கிலத்தில் இருக்கத்தானே செய்கிறது

ஆனா பார்த்திங்கன்னா, கல்வி நிறுவனத்திற்கு “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு” ங்கறது ஒரு அருமையான மார்க்கெட்டிங் டூல்.

சரியாச் சொன்னீங்க. நல்ல மார்க்கெட்டிங் டூல்தான்

இது ஒரு நல்ல முயற்சி. நாமும் நம்முடைய தொழிலில் எப்படி எப்படி தமிழில் உள்ள நல்ல விஷயங்களைக் கொண்டுவர முடியுமோ அப்படியெல்லாம் முயற்சி செய்யவேண்டும்.

நல்ல ஐடியாங்க!

கார்ல்சேகன் என்பவர் பல வானவியல் புத்தகங்களை எழுதியிருக்காருங்க. அவர் இறக்கிற சமயத்தில் “Contact” என்ற புத்தகத்தை எழுதியிருந்தாருங்க. அந்தப் புத்தகம் திரைப்படமாகக் கூட வந்ததுன்னு நினைக்கிறேன். அந்த புத்தகத்தில் ஓரிடத்தில் வேறுகிரகத்துக்கு பூமியிலிருந்து மனிதர்களை அனுப்புகிற மாதிரி ஒரு காட்சி வரும். அதில், விண்வெளி ஓடத்தில் செல்ல 5 பேரைத் தேர்ந்தெடுப்பாங்க. அதில் ஒருத்தர் தமிழ்ப்பெண். பழமையான திராவிட நாகரிகத்தின் சார்பாக அந்த தமிழ்ப்பெண்ணைத் தேர்ந்தெடுத்திருப்பாங்க. அடுத்த கூட்டத்துக்கு அந்தப் புத்தகத்தைக் கொண்டு வர்ரேங்க.

ம் . . . அப்படிங்களா!

அடுத்த குறளில், எண்ணும் எழுத்தும் இரு கண்களைப் போன்றது என்கிறார் வள்ளுவர். எழுத்து என்று சொல்லும் பொழுது எந்த ஒரு மொழியையும் சொல்லாமல் வெறும் எழுத்து என்று பொதுவாக சொல்கிறார் வள்ளுவர்.


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். - 394

கல்வி கற்றவர்கள் மகிழ்ச்சியுடன் கூடி, அளவளாவி கருத்துக்களைப் பரிமாறியபின் பிரிய மனமில்லாமல் பிரிவார்கள் என்பது பல உரையாசிரியர்களின் கருத்து. நாமக்கல் கவிஞர் உரை வேறு மாதிரி விலகி ஒப்புக்கொள்ள இயலாதவாறு இருந்தது.

(இக்குறளைப் பற்றி சிறுஆராய்ச்சி செய்திருக்கேன். அது பற்றி அடுத்த கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததுக்கு அப்புறம் அது உருப்படியா இருந்ததுன்னா அடுத்த வலைப்பூவில் எழுதறேன்)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. - 396

பேச்சு இப்படிப்போனது.

இங்க பார்த்தீங்கன்னா “தொட்டனைத்து” என்பது மண்ணைத் தோண்டுவதாக இருக்காது என்று நினைக்கிறேங்க. ஏன்னா! கிணத்துல தண்ணி இறைக்க இறைக்க நல்லதண்ணி ஊறும். அதனால, வள்ளுவர் தண்ணீ இறைக்க இறைக்க அப்படீங்கற பொருள்ளதான் “தொட்டனைத்து” அப்படீன்னு சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்.

ஆனா! பாத்திங்கன்னா, ஆத்து ஓரத்துல மணல்ல எவ்வளவு ஆழம் தோண்டறீங்களோ அந்த அளவுக்குத்தான் நீர் சுரக்கும்.

ஆமா ஆமா இங்கேகூட வள்ளுவர் மணற்கேணி அப்படீன்னுதானே சொல்லியிருக்கிறார். கேணின்னா கிணறு. மணற்கேணின்னா மணல் கிணறு. அதனால, வள்ளுவர் ஆத்தங்கரையோரமுள்ள மணல் கிணறு தோண்டறதைத்தான் இங்க சொல்லியிருப்பார்.

எந்த அளவுக்கு படிக்கிறிங்களோ அந்த அளவுக்கு அறிவு வளரும் என்பதுதான் கருத்து.

அடுத்த குறள்ள பாத்தீங்கன்னா, இரண்டு அர்த்தங்கள் வரும். அவை என்னன்னா,

1. எந்த நாடும் உன்னுடைய நாடு ஆகும், எந்த ஊரும் உன்னுடைய ஊர் ஆகும் என்கிற மாதிரி கல்விக்கு பெருமை இருப்பாதனால நீ ஏன் இறக்கும் தருவாய் வரைக்கும் படிக்காம இருக்கிறாய்?
2. இப்படி பல பயன்கள் கல்வி கற்பதால் இருக்கிற காரணத்தால, ஏன் தொடர்ந்து சாகிறவரைக்கும் படிக்காம இருக்கிறாய்?

ஆமா கடைசிவரைக்கும் கற்றுக்கொண்டு இருந்தால் Alzheimers வராது அப்படீன்னு சொல்வாங்க.

வீடியோ கேம் கூட Alzheimersஐ குணப்படுத்த/தவிர்க்க உதவறதாவும் சொல்லறாங்க.

மூதுரையில் வர்ற பாடல்ல இப்படி இருக்கு.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.


இப்பவே பாருங்களேன். நாமே படித்ததால்தானே இங்கு (அமெரிக்காவுக்கு) வர முடிந்தது.

திருவள்ளுவர் காலத்துல பல நாடுகளோடு தமிழகத்திற்கு தொடர்பு இருந்ததா?

ஆமாங்க. பல வாணிபத் தொடர்புகள் இருந்திருக்கு.

ஆமா. உதாரணமா, oriza sativa அப்படிங்கறது அரிசியோட தாவரவியல் பெயர். அதுல வர்ற oriza அப்படிங்கறது கிரேக்க மொழியிலிருந்து வந்தது. ஆனால், orizaங்கற கிரேக்க வார்த்தை அரிசி என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வந்ததா சொல்வாங்க.

ஆமாங்க யுவான்சுவாங் என்பவர், சீனாவிலிருந்து இந்தியா வந்து பல இடங்கள சுத்திப் பாத்து குறிப்புகள் எழுதினதாச் சொல்வாங்க. அவர் படித்து இருந்ததால அவருக்கு எல்லா இடத்திலும் சிறப்பான வரவேற்பு கிடைத்ததாச் சொல்வாங்க.

தமிழகத்துல காஞ்சிக்கூட வந்து போனதா சொல்வாங்க.

அடுத்த குறளைப்பார்ப்போம்.

ஒருமுறை கற்றகல்வி பல தலைமுறைகளுக்கு உதவும் அப்படீங்கற மாதிரித்தான் சொல்வாரென்று நினைக்கிறேன். ஏன்னா “எழுமை” ங்கற வார்த்தைக்கு ஏழு பிறப்பு என்று பொருள் கொண்டால் சரியாக வருமா? என்பது கேள்வி


அதற்கு அடுத்த குறளில், படித்த காரணத்தால் தான் இன்புறுவதோடு உலகமும் இன்புறுவது கண்டு கற்றவர்கள் மேலும் மேலும் கல்வி கற்க முற்படுவார்கள் அப்படீங்கறார் வள்ளுவர்.

கடைசி குறளில், கல்வியை “கேடு இல்லாத செல்வம்” என்று சொல்கிறார்;


Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Friday, November 11, 2005

இறைமாட்சி

ஒரு குறிக்கோளை நோக்கி உழைக்கும் பொழுது அதில் ஒரு சிறிய பகுதி வெற்றிகரமாகா முடிந்தால் எப்படி மனது குதூகலமடையுமோ அது போன்ற மகிழ்ச்சியுடன் வாஷிங்டன் வட்டார தமிழ் இலக்கியவட்டம் நவம்பர் 6, 2005 அன்று கூடியது. அறத்துப்பால் அதிகாரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பின்னர், அதற்கு ஒரு மீள்பார்வைக் கூட்டமும் முடித்து மற்றொரு புத்துணர்ச்சியுடன், பொருட்பாலின் முதல் அதிகாரமான் இறைமாட்சியை ஆய்வு செய்தது. அப்பொழுது வெளிப்பட்ட கருத்துக்களில் சிலவற்றை பார்க்கலாம் வாங்க.

பொருட்பால் ஏன் திருக்குறளில் இரண்டாவதாக வைக்கப்பட்டுள்ளது?

வள்ளுவர் கருத்துப்படி, பொருள் சேர்த்தலுக்கு அறமே அடிப்படை என்ற காரணத்தினாலேயே பொருட்பால் அறத்துப்பாலுக்கு அடுத்து வைக்கப்பட்டுள்ளது. பொருளானது அறவழியிலேயே சேர்க்கப்படவேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

பொருட்பாலை wealth என்று மொழிபெயர்ப்பது சரியாகப்படவில்லை என்று முனைவர் வா.செ. குழந்தைசாமி சொல்கிறார். ஆனால், G.U. Pope முதற்கொண்டு S.M. Diaz வரை wealth என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

பொருட்பால் கருத்துக்கள் அரசனுக்கு மட்டுமல்ல, குடியாட்சி நிர்வாகத்துறைக்கும் பொருந்தும்.

கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்திலும் வள்ளுவரின் பொருட்பால் கருத்துக்கள் பல உள்ளன. வள்ளுவர் கௌடில்யர் கருத்துக்களை உள்வாங்கினாரா? அல்லது கௌடில்யர் வள்ளுவர் கருத்துக்களை உள்வாங்கினாரா? அல்லது தனித்தனியாகவே எழுதினரா? என்பது தெரியவில்லை.

ஆனால், அர்த்தசாஸ்திரமும், மாக்கியவெல்லியத்தின் 'பிரின்ஸ்'ம் பல சூழ்ச்சி வழிகளை அரசனுக்கு சொல்கிறது. ஆனால், வள்ளுவமோ அறவழியிலேயே அரசனுக்கு பல கருத்துக்களைச் சொல்கிறது.

'இறு' என்றால் தங்கியிருத்தல் என்று பொருளாம். எங்கும் நிறைந்திருப்பவன் என்ற பொருளிலே 'இறைவன்' என்ற சொல்வந்ததாம்.

பல நாகரிகங்களில், அரசன் என்பவன் கடவுளால் படைக்கப்பட்டவன் அல்லது கடவுள் என்று இருந்தது. ஆனால், வள்ளுவர் கூற்றுப்படி அரசன் என்பவன் முறையாக ஆட்சி செய்தாலே அரசனாகக் கருதப்படுவான். அரசனை இறைவன் என்று சொல்லிவிட்டால் , அவனை குறைசொல்ல முடியாது. ஆனால், வள்ளுவரோ பல இடங்களில், அரசனிடம் குறைகாண முற்படுதலை சுட்டுகிறார்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். - 448
( திருக்குறள ்)

என்றும், இவ்வதிகாரத்திலேயே,

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. - 389 ( திருக்குறள் )


என்றும் சொல்கிறார்.


அரசனுக்குரிய குணங்களாக பல குணங்களை இவ்வதிகாரத்தில் சொல்கிறார். நுணுக்கமாகப் பார்த்தால், அவர் எந்த குணத்தையும் திரும்பச் சொல்லவில்லை என்பது புரியும்.

எடுத்துக்காட்டாக, ஒரு குறளிலே, அஞ்சாமை வேந்தனுக்கு இயல்பாக இருக்க வேண்டுமென்கிறார். அடுத்த குறளிலேயே, துணிவுடைமை அரசனுக்கு வேண்டியது என்கிறார். அஞ்சாமைக்கும், துணிவுடைமைக்கும் வித்தியாசம் உண்டா? ஆம். உண்டு.

உதாரணமாக, நீங்கள் காட்டிலே சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது ஒரு சிங்கம் உங்களைத் தாக்க வருகிறது. அப்பொழுது அதை எதிர்த்துப் போராடினீர்களானால், அது அஞ்சாமை.

அதே நேரத்தில், நீங்களே சிங்கத்தின் குகையினைத் தேடிச்சென்று அதனுடன் போராடினீர்களானால், அது துணிவுடைமை.

அஞ்சாமை - courage
துணிவுடைமை - bravery

ப.சிதம்பரம் அவர்கள் பட்ஜெட் கூட்டத்தில், கோட்டிய குறள்

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. - 385 ( திருக்குறள் )



மேலும்,

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். - 386 ( திருக்குறள ்)


குறளைப் படிக்கும் பொழுது, அன்பர்கள் அப்துல் கலாம். மன்மோகன் சிங், அண்ணாதுரை போன்ற காட்சிக்கெளியோரையும் அவர்கள் அனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டார்கள்.

இன்னொரு நுணுக்கமான வித்தியாசமும் உண்டு. ஈகை என்று ஒரு குறளிலும் கொடை என்று மற்றொரு குறளிலும் வள்ளுவர் அரசனுக்கு வேண்டிய குணமாகச் சொல்கிறார்.

கொடைக்கும் ஈகைக்கும் என்ன வித்தியாசம்?

இந்த கேள்விக்கும் பதில் கிடைத்தது.

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை. (வறியவர்களுக்கு கொடுப்பதே ஈகை)

ஆனால், இருப்பவற்கும் கொடுப்பது கொடை.

ஈகை - Charity
கொடை - Gift

வள்ளுவர் அரசனுக்கு இருக்க வேண்டிய அம்சங்களாக இறைமாட்சி அதிகாரத்திலே சொல்லியிருப்பதை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறேன்.

1. படை (பொதுவாக படை என்று சொல்லியிருக்கிறார்)
2. குடி (குடி மக்கள்)
3. கூழ் (உணவுப் பொருள்கள்)
4. அமைச்சு
5. நட்பு
6. அரண்
7. அஞ்சாமை
8. ஈகை
9. அறிவு
10. ஊக்கம்
11. தூங்காமை (சோம்பலின்மை அல்லது காலம் தாழ்த்தாமை)
12. கல்வி
13. துணிவுடமை
14. அறம்
15. மறம்
16. இயற்றல் ( பொருள் சேரும் வழிகளை இயற்றல்)
17. ஈட்டல் (பொருள்களை ஈட்டுதல்)
18. காத்தல் ( ஈட்டிய பொருளைகளைக் காத்தல்)
19. வகுத்தல் ( காத்த பொருளை சரியாக பங்கிட்டு செலவு செய்தல்)
20. காட்சிக்கு எளியனாக இருத்தல்
21. கடுஞ்சொல் சொல்லாதிருத்தல்
22. இன்சொல் சொல்லி வேண்டியதைக் கொடுத்துக் காத்தல்.
23. முறை செயதல் (நீதி முறை செய்து குடிகளைப் பேணுதல்)
24. செவி கசக்குமாறு தன்னைச் சொல்லும் குறைகளைப் பொறுத்தல்
25. கொடை
26. அளி ( அருள், கருணை )
27. செங்கோல்
28. குடிகளைக் காத்தல்

கூட்டத்தில் இன்னும் நிறையப் பேசப்பட்டது.

-நித்தில்


Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Saturday, November 05, 2005

புதிர் #3

நண்பர்கள் குழுவாக நின்று கொண்டு அளவளாவிக்கொண்டு இருந்தார்கள். வழக்கம் போல ஒரு நண்பர் அவருடைய தீரக்கதைகளைச் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அவர் சொன்னார்,
"மரங்களுக்கிடையில் நான் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த பொழுது அந்த மிருகம் ஓடையைக் கடந்து வந்தது. அப்பொழுது என்னால் அதன் நான்கு நனைந்த முழங்கால்களின் முன்பகுதிகளைப் பார்க்க முடிந்தது. . ."

சரியாக இந்த நேரத்தில் வரதன் அங்கு வந்தான். கதைசொல்லிக்கொண்டிருந்த நண்பரைப் பார்த்து நீ எந்த மிருகத்தைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கின்றாய் என்று எனக்குத் தெரியும் என்றான்.

உங்களுக்கு தெரியுமாங்க?
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

புதிர் #2

இன்னொரு புதிரையும் பார்ப்போங்க...

இரண்டு மனிதர்கள் ஆஸ்திரேலியாவின் அடர்ந்த காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கும் போது உலகத்திலேயே உயர்ந்த மரத்தைப் பார்த்தாங்க. சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மரங்கள். அவர்கள் மரத்தின் உயரத்தை துல்லியமாக அளக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் எந்தவிதமான நவீன உயரமளக்கும் கருவிகளும் இல்லை. ஆனாலும் அவர்கள் அம்மரத்தின் உயரத்தை சரியாக அளந்துவிட்டார்கள். எப்படிங்க?

துப்புகள்:

1. அவர்கள் கோணங்களையோ, நிழலையோ உபயோகப்படுத்தவில்லை
2. அவர்கள் மரத்திலும் ஏறவில்லை
3. அவர்கள் கயிறையும், அளவுகோலையும் உபயோகப்படுத்தினார்கள்.

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

புதிர் #1

lateral thinkingக்கு பக்கவாட்டுச் சிந்தனை என்ற மொழிபெயர்ப்பு சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். இப்படி பக்கவாட்டுச் சிந்தனைப் புதிர்கள் சிலவற்றை உங்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேங்க. நம்ம ஊர் விடுகதைமாதிரிதான் இதுவும். உதாரணமாக இந்தக் கதையைப் பார்க்கலாங்க.

தீவிரப்பாதுகாப்புச் சிறையில் இருக்கும் கைதி ஒருவனுக்கு அவன் மனைவி கடிதம் அனுப்பியிருந்தாள்.
"அன்பே நான் இப்பொழுது தோட்டத்தில் கடலை பயிரிடலாம் என்று இருக்கிறேன்"

அதற்கு அந்த கைதி பதிலளிக்கையில்,
"அன்பே, இப்பொழுது பயிரிடாதே! ஏனென்றால், அங்குதான் நான் துப்பாக்கிகளைப் புதைத்து வைத்திருக்கிறேன்" என்றான்.

சிறிது காலம் சென்றபின் இன்னொரு கடிதம் அவன் மனைவியிடமிருந்து வந்தது. அதில்

"அன்பே, நிறைய போலீஸ்காரர்கள் நம் தோட்டத்தைத் தோண்டினார்கள். ஆனால், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றிருந்தது.

அதற்கு, கைதி பதிலில்,

"அன்பே, இப்பொழுது நீ கடலை பயிரிடலாம்" என்றான்.

இங்கு இந்தக் கைதி பக்கவாட்டுச் சிந்தனையை உபயோகப்படுத்தி தனது தோட்டப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டான். இப்படி, சில புதிர்களைப் பார்க்கலாம் வாங்க.

புதிர் #1:

ஒரு எருது ஒரு நாள் முழுவது நடந்து கொண்டேயிருந்ததுங்க. கடைசியில் பார்த்தால், அதனுடைய இரண்டு கால்கள், 32 கிமீ நடந்து இருந்ததுங்க. ஆனால், மற்ற இரண்டு கால்களோ 30 கிமீ தான் நடந்து இருந்ததுங்க. இது எப்படிங்க?


துப்புகள்:

1. கடைசிவரை அந்த எருது உயிருடன்தான் இருந்ததுங்க.
2. அந்த எருது மற்ற எருதுகள் போல சாதாரணமானதுதாங்க. சிறப்பம்சங்கள் எதுவுமில்லைங்க.
3. அது வேலை செய்யும் எருதுங்க.

விடை தெரிந்தாலோ அல்லது மேலும் தகவல் வேண்டுமானாலோ பின்னூட்டமிடுங்க.

-நித்தில்