எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Tuesday, September 13, 2005

சின்ன சின்ன ஆசை . . . சரியா? (தொடர்ச்சி)

தூய்மை என்பது அவா இன்மை. அத்தூய்மை வேண்டுமெனில் வாய்மையுடன் இருக்க வேண்டுமென்று வள்ளுவர் அடுத்த குறளில் கூறுகிறார்.

இப்படி வாய்மை பற்றி பேசும் பொழுது அரிச்சந்திரன் பற்றி பேச்சு எழுந்தது. அரிச்சந்திரன் ஒரு வேளை வள்ளுவர் வழியில், பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின், என்கிறபடியாக நடந்திருந்தால் சந்திரமதி கஷ்டப்பட்டிருக்கமாட்டாளோ என்று தோன்றியது.

அடுத்த குறளில், அறவழியில் நடக்க வேண்டுமென்றால் ஆசைக்கு அச்சப்படு என்கின்றார். இதே போன்ற கருத்தை அறிவுடைமை அதிகாரத்தில் ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ என்றும் சொல்கிறார்.

அடுத்த குறளின் பொருளான ‘அவாவினை முழுவதுமாக விலக்கினால் தவறாமல் நல்லவினை நாம் விரும்பிய வழியிலே வரும்’ என்பதனைப் பொருள் கொள்ளும்பொழுது சிறிது குழப்பம் ஏற்பட்டது.

அப்போது அன்பர் ஒருவர்,
இப்படி பல உரையாசிரியர்கள் பல வகையில் உரையெழுதுவதால் நாம் அதைப் படித்துக் குழம்புகிறோம். இதனைத் தவிர்த்திருக்க வள்ளுவரே விளக்கமாக ஒரு ஸ்டடி கைடு போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், ஒரு வேளை அப்படி அவர் செய்திருந்தாரேயானல், இந்நேரத்தில் அவர் விளக்கம் பிடிக்காமல் யாரேனும் குறளை அழித்து நமக்குக் கிடைக்காமல் செய்திருப்பர். குறளின் பொதுத்தன்மைதான் அதனை இவ்வளவு காலம் காப்பாற்றியிருக்கிறது என்று சொன்னார்.

அடுத்து வருகின்ற குறளில், ஆசையினை துன்பத்துள் துன்பம் என்கிறார். கூட்டத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் வள்ளுவர் பேரின்பம் பற்றித்தான் இந்த அதிகாரத்திலே பேசுகின்றார் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், இப்படி வேடிக்கையாக பேச்சு போனது.

அப்போ வள்ளுவர் இன்பத்துக்கும் ஆசைக்கும் சம்பந்தமேயில்லை என்கிறாரா? எனக்குப் புரியலையே! நான் கார் வாங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். கார் வாங்கினாத்தானே இன்பம்?

இப்ப பெட்ரோல் விக்கிற விலைக்கு கார் வாங்கினால் துன்பந்தானே? அப்புறம் அதை ஒழுங்காக பராமரிக்க வேண்டும். எல்லாம் சிரமந்தானே?



ஆசையினை வள்ளுவர் கடைசிக் குறளில், அடங்காத இயற்கைத்தன்மை கொண்டது என்கின்றார். அதை அடக்கி விட்டால், பேரா இயற்கை என்ற பேரின்பம் கிட்டும் என்கின்றார்.

சாதாரண மனிதன் ஆசையில்லாமல் வாழ முடியாது. ஆனால், அவன் பேராசை கொள்ளக்கூடாது.

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?

கார் வாங்குவது ஆசை. ஆனால் எந்தக் கார் வாங்குகிறோம் என்பதே அது ஆசையா பேராசையா என்பதைத் தீர்மானிக்கிறது.

இந்தியாவில் கார் வாங்க ஆசைப்படுகிறோமா? அல்லது அமெரிக்காவில் கார் வாங்க ஆசைப்படுகிறோமா? என்பதைப் பொறுத்து இருக்கிறது.

நியுயார்க் மன்ஹாட்டனில் கார் வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோமா? அல்லது சிறு நகரங்களில் கார் வைக்க ஆசைப்படுகிறோமா? என்பதைப் பொறுத்து இருக்கிறது.

இப்படி ஆசையென்பது சின்ன ஆசையா? பேராசையா? என்பது இடம், காலம், பொருள் போன்ற விஷயங்களைச் சார்ந்து இருக்கிறது.

வள்ளுவர் துறவிகளுக்கே ஆசையினை அறவே அறுக்க வேண்டுமென்கிறார். ஆனால் சாதாரண மக்கள் பேராசையல்லாத ஆசை கொள்வதில் தவறில்லை என்றவாறு கூட்டத்தில் சொல்லப்பட்டது.

வள்ளுவரே பொருட்பாலில்,

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்றும்

‘செய்க பொருளை’ என்றும்தானே சொல்கிறார்.


-நித்தில்
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Monday, September 12, 2005

சின்ன சின்ன ஆசை. . . சரியா?

டால்ஸ்டாய் கதை ஒன்றில் ஒருவனுக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தது. காலையில் சூரியன் எழுந்தவுடன் அவன் ஓட ஆரம்பித்து மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்குள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ஓடி, மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேர்ந்தால், சுற்றிய இடம் முழுவதும் அவன் சொந்தமாக்கிக் கொள்ளலாம். கிடைத்த இந்த வாய்ப்பை நன்கு உபயோகப்படுத்திக்கொள்ள அவன் விரும்பினான். காலை சூரியோதயம் ஆரம்பித்தவுடன் அவன் ஓட ஆரம்பித்தான். ஓடினான் ஓடினான் ஓடிக்கொண்டேயிருந்தான். வெகுதூரம் ஓடிய அவன் மாலைக்குள் திரும்பவேண்டிய காரணத்தால், திரும்பி ஆரம்பித்த இடத்தை அடைய, ஆசை உந்த, ஓடி வரலானான். கடைசியில் மிகச்சரியாக ஆதவன் அஸ்தமிக்கும் நேரத்தில் வந்து சேர்ந்தான். ஆனால் ஆசையின் காரணமாக வெகுதூரம் ஓடிய களைப்பில் அங்கேயே மாரடைப்பால் இறந்தும் போனான்.

இது பேராசைக்குக் கிடைத்த பரிசு.

அளவான ஆசை இருந்திருந்தால் இடமும் கிடைத்திருக்கும், உயிரும் இருந்திருக்கும்.

இன்னொரு சின்னக்கதை.

அந்த ஊரிலே சோம்பேறி என்று பெயர் வாங்கிய ஒருவன் மரத்தடி நிழலில் கால் மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டு படுத்திருந்தான். அங்கு வந்த பெரியவர் ஒருவர் அவனைப்பார்த்து அறிவுரை சொல்லலானார்.

தம்பி! இப்படி படுத்துக் கிடக்கிறாயே? ஒரு வேலை கீலை செய்யக்கூடாதா?

வேலை செய்தால் என்னங்க கிடைக்கும்?

என்னப்பா இப்படிக் கேட்கிறே. நல்ல சம்பளம் கிடைக்கும்.

நல்ல சம்பளம் கிடைத்தால் ?

நல்ல வீடு வாங்கலாம்.

நல்ல வீடு வாங்கினால் ?

நாலு பேர் பார்த்து உனக்குப் பெண் தருவார்கள். கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம்.

கல்யாணம் பண்ணினால்?

குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். குழந்தைகள் வளர்வார்கள்.

குழந்தைகள் வளர்ந்தால்?

பெரியவர்களாகி உன்னைக் கவனித்துக்கொள்வார்கள். நீ கால் மேல் கால் போட்டு ஓய்வாக அனுபவிக்கலாம்.

அதைத்தானே இப்போ செய்துகொண்டு இருக்கிறேன்! என்றான் அந்தச் சோம்பேறி.

ஆசை(அவா) கூடாது என்று ‘அவா அறுத்தல்’ என்ற அதிகாரத்திலே சொல்லியிருக்கிற வள்ளுவர், நம்மை மேற்சொன்ன கதையில் வந்தவனைப்போல் சோம்பேறியாகச் சொல்கிறாரா?

11 செப்டம்பர் 2005ல் வாஷிங்டன் வட்டாரத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் இடையிடையே சொல்லப்பட்ட கதைகள் இவை. வள்ளுவர் ‘அவா அறுத்தல்’ பற்றி என்னதான் சொல்கிறார் என்று பல்வேறு உரையாசிரியர்களின் உரைகளோடு கூட்டத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் அலசும் பொழுது சொன்ன சுவையான கருத்துக்களில் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.

முந்தைய அதிகாரம் மெய்யுணர்தல் பற்றியது. மெய்யுணர்தலுக்குப் பின் அவாஅறுத்தல் தேவையா? ஏன் மெய்யுணர்தலுக்குப் பின் இவ்வதிகாரம் வைக்கப்பட்டுள்ளது?

மெய்யுணர்ந்த பின்னருங்கூட அவா வருவதற்கான் வாய்ப்பு இருக்கிறபடியால், மெய்யுணர்தல் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது.

துறவறவியலில் வைக்கப்பட்டுள்ள அதிகாரமாக இருப்பதால், இது துறவிகளுக்காகச் சொல்லப்பட்ட அதிகாரம் என்றிருந்தாலும், சாதாரண மக்கள் எந்தவகையில் பயனடையமுடியும் என்ற வகையிலேயே ஆய்வு நடந்தது.

அவா என்றால் என்ன? என்ற அடிப்படையான கேள்வி எல்லாருடைய மனதிலும் எழுந்தது.

துறவிகளுக்கு ‘அவா’ என்றால் ‘ஆசை’ என்று பொருள் கொண்டால், சாதாரண மக்களுக்கு ‘பேராசை’ என்று பொருள் கொள்ள வேண்டும் என்ற கருத்து எழுந்தது. ஏனென்றால் ஆசையில்லாமல் மனிதன் வாழ முடியாது.

ஒரு உரையாசிரியர், அவா அறுத்தல் என்றால் ‘நிலையில்லாத, பொய்யான பொருள்கள் மேல் ஆசையைத் தவிர்த்தல்’ என்று சொல்கிறார்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. - (திருக்குறள்)

இந்தக் குறளில் வள்ளுவர், ஆசை எல்லா உயிர்க்கும் எப்பொழுதும் தவறாமல் மறுபிறப்பை தருகின்ற விதையாக இருக்கிறது என்று சொல்கிறார்.

மறுபிறப்பினைப் பற்றி வள்ளுவர் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். வள்ளுவர் இப்படிச் சொல்லுவது சரியா என்பது ஒருபுறமிருக்க, பகுத்தறிவுவாத உரையாசிரியர்கள் வள்ளுவர் மறுபிறப்பு என்று சொல்லவில்லை என்பது போல் மழுப்பியிருப்பது ஏற்புடையது அல்ல என்ற கருத்து பலமாக எழுந்தது.

வள்ளுவர் காலத்தில் இருந்த, நமக்குத் தெரிந்த, மதங்கள் மூன்று.

1. இந்து மதம் என்ற பெயரில்லாவிட்டாலும் (பிராமண மதம் அல்லது வைதீக மதம்) மற்றொருபெயரிலிருந்த இந்து மதம்.

2. பவுத்த மதம்

3. சமண மதம் (ஜைன மதம்)


இவ்வனைத்து மதங்களிலும் மறுபிறப்பு என்ற கருத்து இருந்தபடியால், அதிலிருந்து உள்வாங்கி வள்ளுவர் மறுபிறப்புப் பற்றி சொல்லியிருக்கின்றார் என்று அன்பர்கள் சொன்னார்கள்.

வள்ளுவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று குறளின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியாத வகையிலே அமைத்திருந்ததனாலேயே குறள் இன்று வரை வாழ்ந்துகொண்டிருக்கிறது.

வள்ளுவரின் மறுபிறப்புக் கருத்து இன்றைய காலகட்டத்தில் ஏற்கக்கூடிய ஒன்றா? என்ற கேள்வி கூட்டம் நடந்த அறையின் ஒரு ஓரத்தில் கடைசிவரை நின்று கொண்டேயிருந்தது.

‘எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவர் சொன்னது ஆடு, மாடு போன்ற உயிரினங்களுக்கும் பொருந்துமா? என்று ஒருவர் கேட்டார்.

வள்ளுவர் மற்றொரு இடத்தில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்லும் பொழுது மனிதர்களை மட்டுமே குறிப்பிடுகிறார். அது மட்டுமல்லாமல் இந்த துறவறவியல் மனிதர்களுக்கு மட்டுமே பொருந்துவதால் இங்கு ‘எல்லா உயிர்க்கும்’ என்பதை ‘எல்லா மனிதர்களுக்கும்’ என்றே பொருள் காணவேண்டும் என்று விடை காணப்பட்டது.

அடுத்து வருகின்ற குறளில் வள்ளுவர் ‘வேண்டாமை’ ஒரு சிறந்த செல்வம் என்று சொல்கிறார். அப்பொழுது அன்பர் ஒருவர், மாணிக்கவாசகர் இறைவனிடம் தன் வேண்டுதலைக் குறிப்பிடும் பாடலைப் பாடி பொருளும் சொன்னார்.

வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே.


பொருள்:

இறைவா!
நான் வேண்டுவது நீ அறிவாய்.
வேண்டியது அனைத்தும் நீ தருவாய்.
வேண்டுகின்ற அயனுக்கும் மாலுக்கும் அரியவனாவாய்.
என்னை நீ ஆட்கொண்டாய்.
நான் உன்னை அருள் செய்ய வேண்டி கேட்டதால் அருள் செய்தாய்.
உன்னிடம் ஆசையாக பரிசு என்ன கேட்கப்போகிறேன் என்று என்னைக் கேட்பாயானால், அதுவும் உன்னுடைய விருப்பந்தானே!


(தொடரும்...)

-நித்தில்