எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Saturday, December 10, 2005

அறிவுடைமை பற்றி வள்ளுவர் - 1


சுத்தியும் எங்கபாத்தாலும் ஆளுயரத்துக்கும் மேல காய்ஞ்சு போன மஞ்சள் நிறத்தில கதிரும், தட்டும், புல்லும் புதருமான அடர்த்தியான காடு. அதுக்கு நடுவுல பத்து பதினைந்து பேர் நடந்து போய்கிட்டு இருந்தாங்க. அந்தக்கூட்டத்தில ஒரு வயசானவரும் இருந்தாரு. தூரத்துல பாத்தா ஒரே புகை. நல்லா உத்து பாத்தா தீ பத்திக்கிட்டு எரியுது. சரின்னு இன்னொருபக்கம் திரும்பிப் பாத்தாலும் தீ கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தள்ளி எரிஞ்சுகிட்டு இருக்குது. கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தீ வளையத்துக்குள்ள அவங்க சிக்கிகிட்டாங்க.

காட்டுத்தீயோடு உஷ்ணத்தை பக்கத்துல போயி பாத்தா நல்லாபுரியும். எல்லாரும் உயிருக்கு பயந்துகிட்டு இருந்தாங்க. எந்தப்பக்கமா ஓடறது? எல்லாபக்கமுந்தான் தீ எரியுதே!

அப்ப பெரியவர், “நாம இங்க நமக்கு பக்கத்துல தீ பத்த வச்சு புதர்களை எல்லாம் எரிச்சு தீ நம்மகிட்ட வராதமாதிரி ஒரு பாதுகாப்பு பண்ணிக்கலாம்” ன்னு சொன்னாரு.

உடனே அங்க இருந்தா ஒருத்தர் தீப்பெட்டியை உரசி பக்கத்துல இருந்த புதரை பத்த வைக்கப்போனாரு. பெரியவர் உடனே “தம்பி நிறுத்து”. அப்படீன்னாரு.

“கொஞ்சம் பொறுத்திருந்து பத்த வைக்கலாம். ஏன்னா, தூரத்தில எரியுற தீ இன்னும் கொஞ்சம் பக்கத்துல வரும்போது தீ சூடா இருக்கறதனால காத்து அந்த தீயை பாத்து வீசும். இப்ப காத்து நம்ம பாத்துதான் வீசுது. அதனால தீ சுமாரா அரை கிலோ மீட்டர் தூரத்துல இருக்கும் போது பத்த வைக்கலாம். அப்பத்தான் நாம நெனக்கிறமாதிரி நாம பத்த வச்ச தீ எதிர் திசையில் போயி நம்ம காப்பாத்தும்” ன்னு மேலும் சொன்னாரு.

இப்படி திட்டமிட்டபடி அவங்க தீய பத்தவச்சு காட்டுத்தீயிலிருந்து தங்களை காப்பாத்திகிட்டாங்க.

இங்க அவங்கள காப்பாத்துனது அந்த பெரியவரோட அறிவு. இப்படி அறிவு நம்மை காப்பத்தறதப் பத்தி கோடிக்கணக்குல கதைகள் இருக்கு. அறிவுடைமை அதிகாரத்துல வள்ளுவர் முதல் குறள்ள “அறிவு அழிவிலிருந்து காக்ககூடிய ஒரு கருவி. அந்த அறிவு எதிரியாலும் உள்ளே வந்து அழிக்க முடியாதது” ன்னு சொல்றார்.

இப்ப இணையதளத்தையே எடுத்துக்குங்க. உதாரணமா இணையதளத்துல மின்னஞ்சல் பார்க்கப்போறோம். அப்போ மேலேயோ, பக்கத்திலேயோ மினுக் மினுக்குன்னு ஒரு விளம்பரம். இல்லைன்னா பாப்-அப் லே விளம்பரம். அதுல, ராசிபலன், ஜாதகம், குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சின்னோ அல்லது வேற ஏதாவது தேவையில்லாத, ஆனா ஆர்வத்தை தூண்டற மாதிரியோ இருந்ததுன்னா உடனே கிளிக். பார்க்கவேண்டிய மின்னஞ்சல் மறந்துபோச்.

அதே மாதிரி கணினிகள்ள ஏகப்பட்டவகையில் வைரஸ், worm ன்னு அழிவு தர்றமாதிரியோ அல்லது தொந்தரவு தர்ற மாதிரியோ புரொகிராம் எழுதறாங்க. அதுல பல பேரு சின்னவயசு பசங்கதான். இப்படி அழிவு தர்ற வழியில் புரொகிராம் எழுதாம open source ல உபயோகப்படற மாதிரி எத்தனையோ வகையில அவங்க புரொகிராம் எழுதினா எவ்வளவு நல்லாயிருக்கும்.

இதுக்குத்தானோ என்னவோ வள்ளுவர் 422வது குறள்ள, மனம் போன போக்கில அறிவை செலவு செய்யாம தீமைகளை ஒதுக்கி நன்மைகளை மனதில் வைத்து செலவு செய்வதே அறிவுன்னு சொல்றாரோ?

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். - 421

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. - 422


Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Friday, December 02, 2005

கேள்வி

கல்வி கற்பது பற்றி வள்ளுவர் 3 அதிகாரங்களா எழுதியிருக்காரு. ஏன் அப்படி எழுதியிருக்காரு? ன்னு கேள்வி கேட்டு பதிலும் சொன்னாங்க இலக்கிய ஆய்வுக்கூட்டத்துல.

கல்வி பத்தி சொல்ல அவர்கிட்ட நிறைய விசயங்கள் இருந்தது. அத்தனையும் ஒரே அதிகாரத்துல சொல்லமுடியாதுங்கறதனாலே 3 அதிகாரமா, கல்வி, கல்லாமை, கேள்வின்னு பிரிச்சு சொல்லியிருக்காரு அப்படீன்னு சொன்னாங்க.

இந்த அதிகாரத்தில கேள்வி அப்படீன்னா கேட்டு அறிவதால உண்டாகக்கூடிய அறிவு என்ற பொருளத்தான் எடுத்துக்கனும். நடைமுறையில, கேள்வின்னா வினா ங்கற பொருளும் உண்டு. ஆனா, இங்கே இந்த பொருள் பொருந்தாது.

நமக்கு கிடைக்கக்கூடிய தலையான செல்வங்கள் பலவற்றில் ‘கேள்வி ஞானம்’ ஒன்னுன்னு வள்ளுவர் முதல் குறள்ள சொல்றாரு.

பழம் அப்படீங்கற உரையாசிரியர் ஆங்கிலத்தில கேள்வி என்ற சொல்லை மொழிபெயர்க்கும்போது listening and learning இரண்டையும் சேர்த்து liserning ன்னு ஒரு வார்த்தைய உருவாக்கறாரு. இங்கே கேள்வின்னா வெறும் கேட்பது மட்டுமல்ல ‘கேட்டுக் கற்றுக்கொள்வது’ ன்னு பழம் சொல்றாரு.

அடுத்த 412வது குறள்ள பாத்தீங்கன்னா, ‘செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ அப்படீன்னு எழுதியிருக்காரு. அன்பர்கள் அப்போ சொன்னாங்க, ‘இந்த குறள்ள வள்ளுவர், சாப்பிடுங்கன்னு சொல்லறப்போ சிறிது வயிற்றுக்கும்னு சொல்லி கொஞ்சமா சாப்பிடுங்க அப்படீங்கறாரு’

ஆமா, அதிகமா சாப்பிட்டா தூக்கமில்ல வரும். அப்புறம் எப்படி கேட்கறது?

அதே சமயத்துல வள்ளுவர் இப்படிச் சொல்லறதாகவும் எடுத்துக்கலாம். கேட்டு அறிகிறேன்னு சொல்லிகிட்டு நல்லவர்கள் பேச்சை கேட்டுகிட்டே இருந்து உங்களுடைய உடல்நலத்தைக் கெடுத்துக்காதீங்க, இடையில இடையில கொஞ்சமா சாப்பிட்டு உடம்பை கவனித்துக்கொள்ளுங்க, அப்பத்தான் மேலும் மேலும் கற்க முடியும்ன்னு சொல்லறதாகவும் எடுத்துக்கலாம்.

என்ன இருந்தாலும், பசி காதை அடைக்கும் இல்லைங்களா? வள்ளுவர் அதையும் யோசிச்சுதான் எழுதியிருக்காரு.

அப்ப நண்பர் ஒருவர் சொன்னார்,

‘உத்திரப்பிரதேசத்தை (தலை) கவனிச்சுக்கிட்டு இருந்தாலும் மத்தியபிரதேசத்தையும் (வயிறு) அப்ப அப்போ கவனிச்சுக்கனும்’

413வது குறள்ள, நெய்வேத்தியம் தேவர்களுக்கு படைத்தால் எப்படி தேவர்கள் அதை சாப்பிடுவதில்லையோ, அது போல கேள்வி அறிவில் நாட்டமுடையவர்கள் நல்ல உணவுப்பொருள்கள் முன்னாலே இருந்தாலும் அதில் நாட்டம் கொள்ள மாட்டார்கள் என்கிறமாதிரி வள்ளுவர் சொல்கிறார்.

சாப்பாட்டில் நாட்டமில்லாத குணத்தில (மட்டும்) தேவர்களும், கேள்வியில் நாட்டமுள்ளவர்களும் ஒன்னுன்னு சொல்றார்.

ஆமா! நமக்கு தெரிஞ்சு எந்த காலத்துல படையலா வைத்த உணவுப் பொருள்களை தேவர்களோ, கடவுளர்களோ சாப்பிட்டிருக்காங்க? நாமதானே சாப்பிடறோம்.

414வது குறளுக்கு பொருள் சொல்லும் பொழுது கிட்டத்தட்ட எல்லா உரையாசிரியர்களும், கேள்வியறிவு உங்களோட வாழ்க்கையில தளர்ச்சியான காலகட்டத்துல ஊன்றுகோலாக இருந்து உதவும்னு சொல்லறாங்க.

ஆனா, இளங்குமரனார் மட்டும் வேறுபட்டு, ‘ஊற்றாம்’ ன்னா ‘ஊற்று நீர்’ ன்னு பொருள் சொல்லி ஊற்று நீர் போல பயன்தரும்ங்றார்.

415வது குறள்ள, நல்லவர்களுடைய சொற்களைக் கேட்டால் அது உன்னுடைய கஷ்டகாலத்தில் ஊன்றுகோலாக இருக்கும்னு சொல்றார். இங்கே பாத்தீங்கன்னா ‘கற்றவர்களுடைய சொற்களைக் கேட்டால்’ அப்படீன்னு சொல்லாம ‘நல்லவர்களுடைய சொற்களை கேட்டால்’ அப்படீன்னு எழுதியிருக்காரு.

நடைமுறையில எல்லா கற்றவர்களும் நல்லவர்களாக இருப்பதில்லை பாருங்க. நாட்டுல படிச்சவங்க பலபேரு பாவகாரியங்கள் பண்ணிகிட்டுதானே இருக்கிறாங்க. இன்னும் சொல்லப்போனா படிக்காதவங்களவிட படிச்சவங்க பண்ற அட்டூழியம்தான் அதிகமா இருக்குன்னு சொல்லுவாங்க. அதனாலதான் வள்ளுவர், கற்ற நல்லவர்களுடைய சொற்களைக் கேளுங்கள்னு சொல்லியிருக்கிறார்.

இப்படி நுணுக்கமா வள்ளுவர் பல விசயங்களை எழுதியிருக்காருன்னா, அவர் பல புத்தகங்களை படித்து ஆராய்ச்சி செஞ்சுதான் எழுதியிருக்கனும். அதனால, அந்த காலத்துல பல நுணுக்கமான புத்தகங்கள் இருந்திருக்கனும். எப்படியோ அந்த புத்தகங்கள் எல்லாம் நமக்கு கிடைக்காம போயிருச்சு. திருக்குறளாவது கிடைச்சுதே!

(எனக்கு ஒரு சந்தேகம், பல உரையாசிரியர்கள், 414, 415 குறள்களிலே வர்ற ‘ஊற்றாம்’ மற்றும் ‘ஊற்றுக்கோல்’ ஆகிய இரண்டு சொற்களுக்கும் ஊன்றுகோல் ன்னு பொருள் கொண்டு இருக்காங்க. இளங்குமரனார் மட்டும் ‘ஊற்றாம்’ (414)ங்கறதுக்கு ‘ஊற்று நீர்’ ன்னு சொல்றார். ‘ஊற்றுக்கோல்’ (415)க்கு ‘ஊன்றுகோல்’ ங்கற பொருள் சரியாத்தான் படுது. ஆனா, வள்ளுவர் ஒரே அதிகாரத்தில் ஒரே உதாரணத்தை அடுத்து அடுத்து வர்ற குறள்ள சொல்லியிருப்பாரா? இளங்குமரனார் சொன்ன பொருள்தான் சரியா இருக்குமோ?
உங்களுக்கு ஏதாவது கருத்து இருந்தா பின்னூட்டமிடுங்க)

416வது குறள்ள எந்த அளவுக்கு நல்ல விசயங்களைக் கேட்கிறோமோ அந்த அளவுக்கு பெருமை கிடைக்கும்ங்கறார்.

அடுத்த குறளுக்கு உரையாசிரியர்களோட உரைகள்ள சில வித்தியாசங்கள் இருந்தன, அதுல எனக்கு சரின்னுபட்டது இது. கேள்வி அறிவு உடையவர்கள், தவறிப்போய் எதையாவது தப்பா சொல்லிட்டு அது தப்புதான்னு புரிஞ்சுகிட்டாங்கன்னா, அதுக்கப்புறம், தான் சொன்னாதுதான் சரின்னு பிடிவாதமா தப்பையே சொல்லிகிட்டு இருக்கமாட்டாங்க.

இன்னொரு வகையில் சொன்னா, தான் சொன்னது தப்புன்னு தெரிஞ்சா, கேள்வியறிவுடையவர்கள், திருத்திக்கப் பார்ப்பாங்க.

You can be wrong but don’t be stupid

அடுத்த குறள்ள கேள்வியில் நாட்டமில்லாத செவி இருந்தாலும் செவிடானதாகத்தான் கருதப்படும்ங்கறார்.

419வது குறள்ள, கேள்வியறிவு இல்லாதவங்க பக்குவமா, பணிவா பேசறதுங்கறது அதிசயம்னு சொல்லறார்.

பல சமயங்கள்ள வள்ளுவர் அதிகாரத்தோட கடைசிக்குறள்ள பளார்ன்னு ஒரு அறை விடற மாதிரி எழுதியிருப்பாரு. இந்த அதிகாரத்தில பாருங்க, கேள்வியறிவோட சுவையை அறியாத சாப்பாட்டுராமங்க உயிரோட இருக்கறதுக்கும் உயிரோடு இல்லாம இருக்கறதுக்கும் என்ன வித்தியாசம்னு காட்டமா கேட்கிறார்.


செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. - 411

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும். - 412

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. - 413

கற்றில னாயினுங் கேட்க அ•தொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. - 414

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். - 415

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். - 416

பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா பிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். - 417

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. - 418

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயினராதல் அ¡¢து. - 419

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். - 420