எண்ணப்பின்னல்கள்

நண்பரே! எமது எண்ணப்பின்னல்களுக்கு தங்களை வரவேற்கிறேன். திருக்குறள் (Thirukural) விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் - நித்தில்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Monday, October 24, 2005

வள்ளுவர் அறம், அறவினை போன்றவற்றை வரையறுக்கிறாரா?

வள்ளுவன் அறம், அறநெறி (அறத்தாறு), அறவினை போன்றவற்றை வரையறுத்து இருக்கிறாரா? அப்படி வரையறுத்த குறள்கள் உண்டா? இந்த கேள்விக்கு விடை காணலாம் என்ற எண்ணத்தில் அறத்துப்பால் குறட்பாக்களைப் புரட்டிப்பார்த்தேன். அப்பொழுது என் கண்ணிற்கு புலப்பட்ட குறள்கள் இவை. ஒரே குறளில், அறத்திற்கு முழு definition கொடுத்ததாகத் தெரியவில்லை. அறம் என்ற பரந்துபட்ட சொல்லை இரண்டு வரிகளில் வரையறுத்து விடவும் முடியாதுதான்.


முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். - 93


முகம் மலர்ந்து, மனத்தின் அடி ஆழத்திலிருந்து இனிமையான சொற்கள் சொல்வது அறம் என்கிறார். ஆனால் மனத்தில் அடி ஆழத்திலிருந்து வராத இன்சொல் அறத்தின் பெருமை கொண்டது இல்லை என்பதை,

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். -911 (பொருட்பால்)


என்கிறார்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். - 35


இந்தக் குறளில், பொறாமை, ஆசை, கோபம், இன்னாச்சொல் என்ற நான்கும் இல்லாமலிருப்பது அறம் என்கிறார்.


அறனறிந்து வெ•கா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. - 179


இங்கு, மறைமுகமாக அறம் என்றால் என்ன என்று சொல்கிறார். அறத்தினை அறிந்து பிறர் பொருளை கவர நினையாமல் இருக்கும் அறிவுடையாரிடம் செல்வம் சேரும் என்கிறார்.

அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு. - 288


இவ்வாறு, அளவோடு வாழத்தெரிந்த நெஞ்சத்தை அறமென்று சொல்கிறார்,

அளவோடு வாழத்தெரிந்தவர்களிடத்தில் அவர்கள் மேற்கொண்ட அறஉணர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். அளவுக்கு மீறிய வாழ்க்கையால் திருட நினைக்கிறவர்களுடைய மனத்தில் அந்த உணர்ச்சி மறைந்து விடும் என்கிறார்.


அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அ•தும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. - 49


அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் மற்றவர் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்று என்கிறார் இந்தக்குறளில்,

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற. -34


ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறம, என்ற வகையிலே இந்தக் குறளில் சொல்லியிருக்கிறார்.

அடுத்தாக, அறவினை என்பது கொல்லாமை என்று சொல்கிறவிதமாக,

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும். - 321

என்றும், நல்லாறு (நல்ல வழி) என்பதுவும் கொல்லாமை என்று

நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி. - 324


என்ற குறளில் சொல்கிறார்.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Sunday, October 23, 2005

அறத்துப்பாலில் செல்வம் ...

பொருட்பால் என்று வைத்து, அதில் செல்வம் பற்றி வள்ளுவர் நிறையப் பேசுகிறார்.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். -751 (பொருட்பால்)



செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எ•கதனிற் கூ¡¢ய தில். -759 (பொருட்பால்)


அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. 757 (பொருட்பால்)



அதே சமயத்தில் அறத்துப்பாலிலும் செல்வம் பற்றி பேசுகிறார். சில டிப்ஸ் கொடுக்கின்றார். அப்படி செல்வம் பற்றி வள்ளுவர் அறத்துப்பாலில் என்னதான் சொல்கிறார்?

அ•காமை செல்வத்திற்கு யாதெனின் வெ•காமை
வேண்டும் பிறன்கைப் பொருள். - 178.


செல்வம் குறையாமல் இருக்கவேண்டுமானால், மற்றவரின் பொருளைக் கவர நினைக்கக்கூடாது என்கிறார். அதே அதிகாரத்தில்,

அறனறிந்து வெ•கா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. - 179.


மற்றவர் பொருளை அறத்தினை உணர்ந்து கவர நினைக்காதவரிடம் செல்வம், தானே போய்ச் சேரும் என்கிறார்.

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. - 31.


அறமானது, சிறப்பினைத் தருவதோடு செல்வமும் தரும் என்கிறார்.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்று வந்த பொருள். -754 (பொருட்பால்)



செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. - 112.


நடுவுநிலையோடு இருக்கக்கூடிய ஒருவனுக்கு, அவனுடைய செல்வம் அவனுடைய கடைசி காலம்வரை சிதைவில்லாமல் இருந்து பலனளிக்கும்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். -84


விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சியோடு உபசரிப்பவனின் வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

அறத்துப்பாலில் வள்ளுவர் அறிந்தவற்றில் சிறந்தது

வள்ளுவர் தான் அறிந்தவற்றில் சிறந்தது என்றவகையில் அறத்துப்பாலில் கூறுபவை இவை,


பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. - 61.


நாம் அடைய வேண்டுமென்று விரும்புகிற செல்வங்களுக்குள் நல்லறிவுடைய குழந்தைகளைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்தது வேறு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற. - 300.


யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள் வாய்மையைவிட உயர்ந்தது வேறு ஒன்றுமில்லை.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

அறத்துப்பாலில், எது இன்பம்?

இன்பத்துப்பால் என்று தனியாக எழுதியிருந்தாலும், வள்ளுவர் வேறுவகையான இன்பங்களைப் பற்றி அறத்துப்பாலில் சொல்கிறார். அந்த இன்பங்களைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

எது இன்பம்?

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. - 65.


தம்முடைய மக்களின் உடலைத் தொடுதல் உடலுக்கு இன்பம் தருவதாகும். அம்மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும்.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. - 39.


அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். - 228.


தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன் கண்மை உடையவர் பிறருக்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். - 98.


இனிமையான சொற்களையே பேசினால் அது இம்மை மறுமை இரண்டுக்கும் இன்பம் தருவதாக அமையும்.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. - 94.


யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்கு துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. - 75.


உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு. - 352.


மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம்மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்பநிலையைக் கொடுக்கும்.

இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். - 369.


அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாத துன்பம் கெடுமானால் இவ்வுலகிலும் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

சிற்றின்பம் வெ•கி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். - 173.


அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர் நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். - 156.


தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் மட்டும் இன்பம். ஆனால், பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரையில் புகழ் உண்டு.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

இவைகளை மறக்காதீங்க! - அவைகளை மறந்துவிடுங்க!

மறக்காதீங்க! மறக்காதீங்க! மறக்காதீங்க!
இப்படி மறக்காதீங்க! என்று சிலவற்றையும்

மறந்து விடுங்க! மறந்து விடுங்க! மறந்து விடுங்க!
இப்படி மறந்து விடுங்க! என்று சிலவற்றையும் சில குறள்களில் வள்ளுவர் சொல்லியிருக்கிறார். அப்படி எவைகளைத்தான் சொல்கிறார்?

அந்தக்குறள்களையும் கவனிப்போம் வாங்க.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. -204


பிறருக்குக் கேட்டைத்தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தானேயானால், அவனுக்கு அறம் கேடு நினைக்கும்.

அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. -32


ஒருவருக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை. அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை என்கிறார்.


மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. -106


குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்காதீங்க! துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விட்டு விடாதீங்க! என்கிறார்.. அதே அதிகாரத்தில் இன்னொரு குறளில்,

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. - 108.


ஒருவர் முன் செய்த நன்மையை மறப்பது அறம் ஆகாது. அவர் செய்த தீமையை செய்த அப்பொழுதே மறந்து விடுவது நல்லது என்கிறார். இப்படி தீமைகளை மறக்கச் சொன்னவர் இன்னும் சிலதையும் மறக்கச் சொல்கிறார்.


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. - 152.


வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் அதனினும் நல்லது என்கிறார். இன்னொரு குறளில்,


மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். - 303.


யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும். தீமையான வினைகள் அந்தச் சினத்தாலே ஏற்படும் என்கிறார்.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

அறத்துப்பாலில் அறிவு

அறிவு அறத்திற்கு எவ்வாறு உதவுகிறது? அறிவு பற்றி அறத்துப்பாலில் சில குறள்களில் வள்ளுவர் சொல்கிறார்.

அறிவினிலே தலையான அறிவு என்ன என்று இந்தக்குறளில்,

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். - 203.


என்கிறார். தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை எல்லாவகை அறிவிலும் தலையான அறிவு என்கிறார்.

சரி. அறிவினால் என்ன பயன் ? இன்னாசெய்யாமை அதிகாரத்தில்,

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை. - 315.


மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன்தான் என்ன? என்று கேட்கிறார். அதே அதிகாரத்தில் இன்னொரு குறளில்,

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். - 318.


தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத்துன்பங்களைச் செய்தல் என்ன காரணத்தாலோ?


இதே போல, வெ•காமை என்ற அதிகாரத்தில்,

அ•கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெ•கி வெறிய செயின். - 175.


யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் என்ன பயன்? என்கிறார் வள்ளுவர்.


அறிவுடையவர்கள் எப்படி இருப்பார்கள்?

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். - 198.


அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

அறத்துப்பாலில் மனித உயிர் பற்றி...

இந்த ஊரில், safty first, saftey is our #1 priority, என்று சொல்லுவார்கள். அதோடு மட்டுமல்லாமல், எந்த அளவுக்கு உயிருக்கு மதிப்பு கொடுக்கிறார்கள் என்றும் நமக்குத் தெரியும். அறத்துப்பாலில் வள்ளுவர் உயிர் பற்றி என்ன சொல்கிறார்? உயிருக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று பார்ப்போம்.

உயிர் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று சில குறள்களில் சொல்கிறார்.

அன்பின் வழியது உயிர்நிலை அ•திலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. - 80.


அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. - 78.


என்று சொல்லி, உயிர் என்றால் அது அன்புடன்கூடியதாக இருக்க வேண்டும் என்கிறார்.


“தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு”

என்ற ஜேசுதாஸ் பாடிய பாடலை பலரும் ரசித்துக் கேட்டிருப்பீர்கள். அந்தப்பாடலில் ஓருடத்தில் இப்படி வரிகள் வரும்.

“கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி”

பசிக்காகக் கொன்றால் பாவம் இல்லையாம்.
இங்கே வள்ளுவர் எந்தக் கட்சி என்று இந்தக் குறள் வழியாகப் பார்ப்போம்

தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை. - 327.


தன்னுடைய உயிரே போகக்கூடிய நிலையிலும், இன்னொரு உயிரைக் கொல்லாதே என்கிறார்.

இப்படியெல்லாம் வாழ்வதாக இருந்தால் உயிரோடு இருக்காதே என்ற வகையில் காட்டமாக சில குறள்களை இயற்றியுள்ளார்.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். - 214.


ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன். மற்றவர்கள் செத்தவர்களாகக் கருதப்படுவார்கள்.


புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கத் தரும். - 183.


கோள் சொல்லிப் பொய்யனாக உயிர் வாழ்வதைவிடச் செத்துப்போவது அறநூல்கள் சொல்லுகிற புண்ணியத்தைத் தரும்.


ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயி¡¢னும் ஓம்பப் படும். - 131.


ஒருவனுக்கு மேன்மை உண்டாக்குவது நல்லநடத்தைதான். அதனால், அதை உயிரைவிடச் சிறந்ததாகப் பாதுகாக்கவேண்டும்.


சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. - 230.


சாவதைவிடத் துன்பமானது வேறொன்றுமில்லை. ஆனால், வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வருகின்றபோது அச்சாதலும் இனியதேயாகும்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. -309



சினத்தில் அளவுகடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர். சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பானவர்.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. - 82.


என்று விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில் சாவா மருந்தாகிய அமிர்தமே என்றாலும் விருந்தினரை விட்டு தனியே உண்ணாதே என்கிறார். இந்தக் குறள் பரவாயில்லை இந்தத் தொகுப்பில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறமாதிரியான குறள்.
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

அறத்துப்பாலில் - அறமே செய்யாவிட்டாலும் . . .

இப்படி குறட்பாக்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது வேறு சில குறள்களில், அறமே செய்யாவிட்டாலும் பரவாயில்லை இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யாதீர்கள் அல்லது செய்யுங்கள் என்று சில காரிங்களைப்பற்றி சொல்கிறார். அந்தக் குறள்கள் என்னவென்று பார்ப்போமா?

இங்கே வள்ளுவர் சொல்லும் காரியங்களும் அறம்தான். ஆனால், இக்காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே இப்படிச் சொல்லியிருக்கிறார் என்றே கருதுகிறேன். ஆனாலும், இக்குறட்பாக்களை வித்தியாசமான சுவையுடன் நோக்க “அறம் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஆனால் இதைச் செய்யாதீர்கள்” என்ற கண்ணோட்டத்துடனே பார்ப்போம்.

பிறன்மனை விழையாமை என்ற அதிகாரத்தில்,


அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. - 150
(திருக்குறள்)

என்று சொல்கிறார். இதேபோல, அறம் செய்யவில்லை என்றாலும்,


புறங்கூறாதீங்க
கோள்மூட்டாதீங்க
வேட்டு வைக்காதீங்க
காலை வாராதீங்க
போட்டுக்கொடுக்காதீங்க
வத்தி வைக்காதீங்க

என்று புறங்கூறாமை அதிகாரத்தில்,

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. - 181
(திருக்குறள்)

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. - 182
(திருக்குறள்)

இன்னொரு குறளில்,

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. - 297
(திருக்குறள்)

என்று சொல்லி, அறம் செய்யாவிட்டாலும் வாய்மையுடன் இருங்கள் என்கின்றார். இப்படி அறத்தைப் பின்தள்ளி வாய்மையை முன் வைத்த வள்ளுவர் இன்னொரு குறளிலே இந்த வாய்மையையே இரண்டாமிடத்திற்குத் தள்ளுகிறார். அப்படி எதைத்தான் வாய்மையைவிடச் சிறந்தது என்று சொல்கிறார்? அந்தக் குறளைப்பார்ப்போம்

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. 323
(திருக்குறள்)

கொல்லாமையைக் கடைபிடியுங்கள். அதோடு அடுத்ததாக வாய்மையினைக் கடைபிடியுங்கள் என்கின்றார்.

பரவாயில்லை! இந்தத் தொகுப்புடனேயே இதையும் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறபடியான குறளும் ஒன்று உண்டு. அது,

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. - 222
(திருக்குறள்)

இங்கு நல்லாறு என்பதை அறவழி என்று எடுத்துக்கொண்டு, நல்லவழியென்றாலும், இரந்து நிற்காதீர்கள். மேலுலகம் இல்லையென்றாலும் ஈதல் நல்லது என்கின்றார். இங்கு ஒரு முரண்பாடு காணப்படுகிறது. இரந்து நின்று எதையும் வாங்காதீங்க என்கிறார். பிறகு, கொடுத்துக்கொண்டிருங்கள் என்றும் சொல்கிறார். வாங்குபவர்கள் இருந்தால்தானே கொடுக்க முடியும். இதற்கு வள்ளுவர் பதிலும் வைத்திருக்கிறார். அது அறத்துப்பாலில் கிடையாது. பொருட்பாலில் இரவு மற்றும் இரவச்சம் என்று இரு அதிகாரங்கள் வைத்து இருக்கிறார். இப்பொழுது அது பற்றி ஆராயாமல், நாம் அடுத்த தொகுப்புக்குப் போகலாம்.

( valluavar - kural - thirukkural )
Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Saturday, October 01, 2005

ஊழ்

வாஷிங்டன் வட்டாரத்தில், 25 செப்டம்பர் 2005ல் நடந்த திருக்குறள் ஆய்வுக்கூட்டத்தில், அறத்துப்பாலின் கடைசி அத்தியாயமான ஊழ் அலசப்பட்டது. அப்போது அன்பர்கள் தெரிவித்த கருத்துக்களில் சில இங்கே உங்கள் பார்வைக்கு.

இந்த அதிகாரத்திலே வினை என்ற சொல்லே கிடையாது.

முற்பிறவி என்ற சொல்லும் கிடையாது.

அதனால், ஊழ் என்ற சொல்லுக்கு உலகச்சூழ்நிலை, உலகமுறை, உலகியலின் இயற்கை நிகழ்ச்சி என்ற வகையிலே பொருள் கொண்டால் சிறப்பாக அமைகிறது.

வள்ளுவர் இந்த ஊழ் என்ற சொல்லினை வேறு குறள்களிலும் உபயோகப்படுத்தியுள்ளார்.

இணர் ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரை யாதார் (குறள் 650)

இங்கு வள்ளுவர் ஊழ்த்தும் என்ற சொல்லை "இயற்கையாக மலரும்" என்ற பொருள் கொண்டு பயன்படுத்தியிருக்கிறார். இது ஊழ் என்றால் உலகமுறை என்று பொருள் கொள்வதற்கு மற்றொரு சான்றாக அமைகிறது.

ஊழ் என்பதற்கு சில உரையாசிரியர்கள் கொடுத்த விளக்கங்கள் கீழே,

ஊழாவது முன்பு செய்தவினை பின்பு விளையும் முறை
- மணக்குடவர்

அஃதாவது, இருவினைப்பயன் செய்தவனையே சென்று அடைவதற்கு ஏதுவாகிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருள் கொண்ட சொற்கள்.
- பரிமேலழகர்.

ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் "Fate, Destiny" என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

ஊழ் என்பது பழைய வினைகளின் பயன். அதாவது முற்பிறப்புகளில் செய்த நல்வினை தீவினைகளின் பயன்.
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை

ஊழ் முறைமை; உலகியல் நிகழும் முறைமை; உலகியலின் இயற்கை நிகழ்ச்சி
-புலவர் குழந்தை

ஊழ் என்னும் சொல்லுக்கு முறை என்பது பொருள். அம்முறையாவது உலகமுறை அல்லது உலகச் சூழ்நிலை
-முனைவர் வ. சுப. மாணிக்கனார்

ஆகூஊழால் தோன்றும் அசைவுஇன்மை கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி (குறள் 371)

இந்த முதல் குறளுக்குப் பொருள் கொள்ளும் பொழுது,

நல்ல சூழ்நிலை இருக்கும் பொழுது மனிதன் சுறுசுறுப்பாக இருக்கிறான். அதுவே மோசமான சுழ்நிலையாக இருந்தால் சோம்பேறியாக இருக்கிறான். ஆகவே, சில சமயங்களில் சோம்பேறித்தனமாக இருப்பது என்பது இயல்பானது. ஆனால், இந்த குறளையே பிடித்துக்கொண்டு தலைவிதி என்று உட்கார்ந்து கொண்டிருப்பது சரியல்ல என்று சொல்லுவதற்காகவே, ஆள்வினையுடைமையில்,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (குறள் 620)

என்று சொல்லி மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்கிறவர்கள் ஊழை வென்று விட முடியும் என்கிறார்.

ஊழ் அதிகாரமும், மேற்சொன்ன குறளும் முரணான குறட்பாக்கள் அல்ல, ஊழ் என்பதற்கு பொருளைத் தெளிவு படுத்தும் பாக்கள்.

தலைவிதியினை மட்டுமல்ல, வருணாசிரம தருமத்தையும் வள்ளுவர் எங்கேயும் வலியுறுத்தவில்லை.

குறளை எப்படி பிரித்துப் படிக்கவேண்டும் என்பதற்கு ஏதாவது ஒரு பொது விதி இருக்கிறதா? என்ற அன்பர் ஒருவரது கேள்வியும் அலசப்பட்டது.

பொதுவான ஒரு விதி என்கின்ற வகையில் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், குறள் வெண்பா இலக்கணத்துக்காக அபூர்வமாக சிலசமயங்களில் வார்த்தைகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கும். இது சில குறட்பாக்களுக்கு மட்டுமே பொருந்தும். அக்குறட்பாக்களை மட்டும் வித்தியாசமாக பிரித்துப் படிக்க வேண்டியிருக்கும்.

ஆனால், மற்ற குறள்களை உரையாசிரியர்கள் பொருள் கொள்வதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் பிரித்து பொருள் காண்கிறார்கள். மற்றபடி குறளைப் பிரித்துப் படிப்பதற்கு பொதுவான முறை இருப்பதாகத் தெரியவில்லை என்றே விடை காண்ப்பட்டது.

இதைப் படித்துக்கொண்டிருக்கும் அன்பரே! உங்களுக்கு ஏதாகிலும் இது பற்றிய நல்ல கருத்து இருந்தால், அன்புடன் உங்கள் கருத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். இது மற்றவரும் குறளறிவினை விரிவாக்கிக் கொள்ள வழி வகுக்கும்.

சில உரையாசிரியர்கள் தங்கள் கருத்துக்கு குறளை இழுக்க வேண்டுமென வேறு வகையில் பதம் பிரித்து பொருள்கொள்ள முற்பட்டிருக்கின்றனர் என்றவாறும் கருத்து சொல்லப்பட்டது.

போனபிறவியிலே செய்த பாவங்களினால்தான் ஒருவன் இப்பிறவியில் அல்லல்படுகிறான் என்ற பொருள்படும்படியான உரையெழுதும் உரையாசிரியர்கள் கருத்து பலரால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

அது மட்டுமல்லாமல், அப்படிப் பேசுவதில் ஒரு சூழ்ச்சியும் அடங்கியிருப்பதான கருத்தும் வெளிப்பட்டது. ஒருவனுடைய முன்னேற்றத்தினையும், முன்னேற முயற்சிப்பதற்கான முயற்சியினையும் தடுக்கும் விதமாக இக்கருத்து இருப்பதாக அமைகிறது.

இன்னொரு குறளில், நல்ல சூழ்நிலையில் அறிவு வளரும், மோசமான சூழ்நிலையில் அறிவு மழுங்கும் என்கிறார் வள்ளுவர்.


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும். (குறள் 373)

என்னதான் பல நுண்ணிய நூல்கள் படித்திருந்தாலும், ஒருவனுக்கு தன்னுடைய இயல்பான அறிவே குறிப்பிட்ட சூழ்நிலையில் முன்னால் நிற்கும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

எடுத்துக்காட்டாக, நாம் அனைவரும் தேர்வு எழுதச்சென்றிருப்போம். எழுதி முடித்து தேர்வு அறையைவிட்டு வெளியே வந்த பிறகு, வினாத்தாளைப் பார்த்தோமானால், "அட! இந்த வினாவிற்கு விடையெழுதாமல் விட்டுவிட்டோமே! இதற்கு நன்றாக விடை தெரியுமே!" என்ற அனுபவம் பெரும்பாலோர்க்கு இருந்திருக்கும். இந்த அனுபவத்தையும் இக்குறளுடன் பொருத்திப்பார்க்க முடிமென்றே கருதுகிறேன்.


மேலும், "நுண்ணிய நூல்கள் பல" என்று வள்ளுவர் சொல்கிறார். 2000ம் ஆண்டுகளுக்கு முன்னரே பல நுண்ணிய நூல்கள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன என்பதனை எடுத்துச் சொல்வதாக இது அமைந்திருக்கிறது. அந்த அனைத்து நுண்ணிய நூல்களும் நமக்கு இன்று கிடைத்திருக்கிறதா என்பது பெரிய கேள்வி.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு (குறள் 374)

என்ற குறளில், செல்வந்தராக இருப்பதற்குரிய வழி வேறு. அறிவாளியாக இருப்பதற்குரிய வழி வேறு என்கின்றார்.

Forbes இதழில், அமெரிக்காவின் பணக்காரர்களை வரிசைப்படுத்தியிருந்தார்கள். அதில் முதல் ஐந்து பேர்களை எடுத்துக் கொண்டால், அதில் நான்கு பேர்கள் கல்லூரிப் படிப்பை முடிக்காதவர்கள். Paul Allen மட்டுமே MBA முடித்தவர்.

Gates, William Henry III
Buffett, Warren Edward
Allen, Paul Gardnerinvestments
Dell, Michael
Ellison, Lawrence Joseph


அதே சமயத்தில், ஒருவரிடம் அறிவும், செல்வமும் சேர்ந்து இருக்காது என்ற வகையிலே வள்ளுவர் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. செல்வந்தர் மற்றும் தெள்ளியர் ஆவதற்குரிய குணாதிசியங்கள் வேறு வேறு என்று மட்டுமே சொல்கிறார். இந்த இரண்டும் ஒருவரிடத்தில் இருப்பதற்குரிய வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

பெரிய செல்வந்தரானவர்களுக்கு எப்படி செல்வத்தை வைத்து செல்வம் திரட்டலாம் என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

நம்மைப் போன்றோர் மேற்சொன்ன செல்வந்தர்கள் போல் முயற்சிக்காமல் இருப்பதற்கு பலகாரணங்களில் ஒரு காரணம் துணிச்சல் இல்லாமையே. 5000 டாலர் நம்மிடம் அதிகமிருந்து, அதை தொழிலோ, பங்குச் சந்தையிலோ முதலீடு செய்யலாம் என்று எண்ணினால், துணைவியார் "எதுக்குங்க அந்த risk? நகையாக வாங்கிப்போட்டாலவது சேமிப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்" என்பார்கள் என்று சொன்னார் அன்பர் ஒருவர்.

வியாபாரம் என்றாலே ஏமாற்றுதல் என்கின்ற அளவிலே மக்கள் மத்தியில் ஒர் கருத்து இருக்கத்தான் செய்கின்றது. இது முழுமையான உண்மை கிடையாது. நேர்மையாகவும், நியாயமாகவும் வியாபாரம் செய்ய முடியும். ஆனால், நடைமுறையில் வியாபாரத்தில் ஏமாற்றுதல் என்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு (குறள் 375)

ஒரு கோணத்தில் பார்க்கும் பொழுது, நாட்டில் நோய் இருப்பது நல்ல விஷயம் இல்லைதான். அனால், மருந்து வியாபாரம் செய்பவர்களும், மருத்துவ வியாபாரம் (சேவையாக எண்ணாதவர்கள் மட்டும்) செய்பவர்களும் செல்வம் சேர்க்க அதுதான் வழி வகுக்கிறது.

நோய் தீயதானாலும், ஒரு சிலருக்கு நன்மைபயக்கிறது.

அதேபோல், கட்ரீனா மற்றும் ரீடா புயல்களினால், எரிபொருள் விலை உயர்ந்தது தீயதுதான். ஆனால், பல எரிபொருள் நிறுவனத்திற்கு இது ஒரு செல்வம் சேர்க்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. கட்டடம் கட்டும் நிறுவனங்களுக்கும் இது செல்வம் சேர்க்கும் நன்மையாகிவிட்டது.

மற்றொரு உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்தால் அங்கு வேலை செய்பவர்களுக்கு அது தீமைதான். ஆனால், பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் பங்கு உயர்ந்து பங்குதாரர்களுக்கு நன்மையளிக்கிறது.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (குறள் 377)

இக்குறளில், வகுத்தான் என்பதற்கு இறைவன் என்று பொருள் கொண்டால் உரை எழுதுவது எளிதாகிறது. இறைவன் விதித்தபடிதான் நாம் அனுபவிக்க முடியும் என்று பொருள் கொள்ளலாம். ஆனாலும், இந்த அதிகாரத்தில், இறைவன் என்று பொருள் கொள்வது சரியாக இருப்பதாகத் தெரியவில்லை.

அதே நேரத்தில், இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்தவகுத்தலுமான அரசன் என்று பொருள் கொண்டாலும் உரை எளிதாகிறது. ஆனால், இதுவும் முழு மனநிறைவைத் தருவதாக இல்லை.

திருக்குறள் முனுசாமி அவர்கள் சொன்ன உரை திருப்திகரமாக இருந்தது.

காமம் என்பது உணர்ச்சி. காமன் என்பது உருவகம்.
"நிலமென்னும் நல்லாள் நகும்" என்று வள்ளுவர் நிலத்தை "நல்லாள்" என்று உருவகப்படுத்தியுள்ளார்.

இது போலவே, ஊழ் என்பதை உருவகப்படுத்தி "வகுத்தான்" என்றே வள்ளுவர் சொல்லியிருப்பார் என்பது பொருத்தமாக அமைந்திருப்பதாகப்பட்டது.

துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால்
ஊட்டா கழியும் எனின்

இந்தக் குறளுக்கு பல உரையாசிரியர்களும், அன்பர்களும் பலவிதமான் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். எனக்கு மனதுக்கு சரியெனப்பட்டது இது. ஊழின் பெருவலியால், விரும்பிய பொருட்களும், அடிப்படைப் பொருட்களும் கிடைக்காமல் போகும் எனின், பொருளில்லாதார் துறவியாக மாறக்கூடும்.

மற்றொரு வகையில் சொன்னால், துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ண்மே எளிதானது அல்ல. அத்தகைய எண்ணத்தைக் கொண்டில்லாதாரும், துறவறம் மேற்கொள்ளும்படியான் நிலையினை ஏற்படுத்துவது ஊழ்.

(valluvar - kural - thirukkural)


-நித்தில்