வாஷிங்டன் வட்டாரத்தில், 25 செப்டம்பர் 2005ல் நடந்த திருக்குறள் ஆய்வுக்கூட்டத்தில், அறத்துப்பாலின் கடைசி அத்தியாயமான ஊழ் அலசப்பட்டது. அப்போது அன்பர்கள் தெரிவித்த கருத்துக்களில் சில இங்கே உங்கள் பார்வைக்கு.
இந்த அதிகாரத்திலே வினை என்ற சொல்லே கிடையாது.
முற்பிறவி என்ற சொல்லும் கிடையாது.
அதனால், ஊழ் என்ற சொல்லுக்கு உலகச்சூழ்நிலை, உலகமுறை, உலகியலின் இயற்கை நிகழ்ச்சி என்ற வகையிலே பொருள் கொண்டால் சிறப்பாக அமைகிறது.
வள்ளுவர் இந்த ஊழ் என்ற சொல்லினை வேறு குறள்களிலும் உபயோகப்படுத்தியுள்ளார்.
இணர் ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரை யாதார் (குறள் 650)
இங்கு வள்ளுவர் ஊழ்த்தும் என்ற சொல்லை "இயற்கையாக மலரும்" என்ற பொருள் கொண்டு பயன்படுத்தியிருக்கிறார். இது ஊழ் என்றால் உலகமுறை என்று பொருள் கொள்வதற்கு மற்றொரு சான்றாக அமைகிறது.
ஊழ் என்பதற்கு சில உரையாசிரியர்கள் கொடுத்த விளக்கங்கள் கீழே,
ஊழாவது முன்பு செய்தவினை பின்பு விளையும் முறை
- மணக்குடவர்
அஃதாவது, இருவினைப்பயன் செய்தவனையே சென்று அடைவதற்கு ஏதுவாகிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருள் கொண்ட சொற்கள்.
- பரிமேலழகர்.
ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் "Fate, Destiny" என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
ஊழ் என்பது பழைய வினைகளின் பயன். அதாவது முற்பிறப்புகளில் செய்த நல்வினை தீவினைகளின் பயன்.
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை
ஊழ் முறைமை; உலகியல் நிகழும் முறைமை; உலகியலின் இயற்கை நிகழ்ச்சி
-புலவர் குழந்தை
ஊழ் என்னும் சொல்லுக்கு முறை என்பது பொருள். அம்முறையாவது உலகமுறை அல்லது உலகச் சூழ்நிலை
-முனைவர் வ. சுப. மாணிக்கனார்
ஆகூஊழால் தோன்றும் அசைவுஇன்மை கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி (குறள் 371)
இந்த முதல் குறளுக்குப் பொருள் கொள்ளும் பொழுது,
நல்ல சூழ்நிலை இருக்கும் பொழுது மனிதன் சுறுசுறுப்பாக இருக்கிறான். அதுவே மோசமான சுழ்நிலையாக இருந்தால் சோம்பேறியாக இருக்கிறான். ஆகவே, சில சமயங்களில் சோம்பேறித்தனமாக இருப்பது என்பது இயல்பானது. ஆனால், இந்த குறளையே பிடித்துக்கொண்டு தலைவிதி என்று உட்கார்ந்து கொண்டிருப்பது சரியல்ல என்று சொல்லுவதற்காகவே, ஆள்வினையுடைமையில்,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (குறள் 620)
என்று சொல்லி மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்கிறவர்கள் ஊழை வென்று விட முடியும் என்கிறார்.
ஊழ் அதிகாரமும், மேற்சொன்ன குறளும் முரணான குறட்பாக்கள் அல்ல, ஊழ் என்பதற்கு பொருளைத் தெளிவு படுத்தும் பாக்கள்.
தலைவிதியினை மட்டுமல்ல, வருணாசிரம தருமத்தையும் வள்ளுவர் எங்கேயும் வலியுறுத்தவில்லை.
குறளை எப்படி பிரித்துப் படிக்கவேண்டும் என்பதற்கு ஏதாவது ஒரு பொது விதி இருக்கிறதா? என்ற அன்பர் ஒருவரது கேள்வியும் அலசப்பட்டது.
பொதுவான ஒரு விதி என்கின்ற வகையில் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், குறள் வெண்பா இலக்கணத்துக்காக அபூர்வமாக சிலசமயங்களில் வார்த்தைகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கும். இது சில குறட்பாக்களுக்கு மட்டுமே பொருந்தும். அக்குறட்பாக்களை மட்டும் வித்தியாசமாக பிரித்துப் படிக்க வேண்டியிருக்கும்.
ஆனால், மற்ற குறள்களை உரையாசிரியர்கள் பொருள் கொள்வதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் பிரித்து பொருள் காண்கிறார்கள். மற்றபடி குறளைப் பிரித்துப் படிப்பதற்கு பொதுவான முறை இருப்பதாகத் தெரியவில்லை என்றே விடை காண்ப்பட்டது.
இதைப் படித்துக்கொண்டிருக்கும் அன்பரே! உங்களுக்கு ஏதாகிலும் இது பற்றிய நல்ல கருத்து இருந்தால், அன்புடன் உங்கள் கருத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். இது மற்றவரும் குறளறிவினை விரிவாக்கிக் கொள்ள வழி வகுக்கும்.
சில உரையாசிரியர்கள் தங்கள் கருத்துக்கு குறளை இழுக்க வேண்டுமென வேறு வகையில் பதம் பிரித்து பொருள்கொள்ள முற்பட்டிருக்கின்றனர் என்றவாறும் கருத்து சொல்லப்பட்டது.
போனபிறவியிலே செய்த பாவங்களினால்தான் ஒருவன் இப்பிறவியில் அல்லல்படுகிறான் என்ற பொருள்படும்படியான உரையெழுதும் உரையாசிரியர்கள் கருத்து பலரால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
அது மட்டுமல்லாமல், அப்படிப் பேசுவதில் ஒரு சூழ்ச்சியும் அடங்கியிருப்பதான கருத்தும் வெளிப்பட்டது. ஒருவனுடைய முன்னேற்றத்தினையும், முன்னேற முயற்சிப்பதற்கான முயற்சியினையும் தடுக்கும் விதமாக இக்கருத்து இருப்பதாக அமைகிறது.
இன்னொரு குறளில், நல்ல சூழ்நிலையில் அறிவு வளரும், மோசமான சூழ்நிலையில் அறிவு மழுங்கும் என்கிறார் வள்ளுவர்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும். (குறள் 373)
என்னதான் பல நுண்ணிய நூல்கள் படித்திருந்தாலும், ஒருவனுக்கு தன்னுடைய இயல்பான அறிவே குறிப்பிட்ட சூழ்நிலையில் முன்னால் நிற்கும் என்று வள்ளுவர் சொல்கிறார்.
எடுத்துக்காட்டாக, நாம் அனைவரும் தேர்வு எழுதச்சென்றிருப்போம். எழுதி முடித்து தேர்வு அறையைவிட்டு வெளியே வந்த பிறகு, வினாத்தாளைப் பார்த்தோமானால், "அட! இந்த வினாவிற்கு விடையெழுதாமல் விட்டுவிட்டோமே! இதற்கு நன்றாக விடை தெரியுமே!" என்ற அனுபவம் பெரும்பாலோர்க்கு இருந்திருக்கும். இந்த அனுபவத்தையும் இக்குறளுடன் பொருத்திப்பார்க்க முடிமென்றே கருதுகிறேன்.
மேலும், "நுண்ணிய நூல்கள் பல" என்று வள்ளுவர் சொல்கிறார். 2000ம் ஆண்டுகளுக்கு முன்னரே பல நுண்ணிய நூல்கள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன என்பதனை எடுத்துச் சொல்வதாக இது அமைந்திருக்கிறது. அந்த அனைத்து நுண்ணிய நூல்களும் நமக்கு இன்று கிடைத்திருக்கிறதா என்பது பெரிய கேள்வி.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு (குறள் 374)
என்ற குறளில், செல்வந்தராக இருப்பதற்குரிய வழி வேறு. அறிவாளியாக இருப்பதற்குரிய வழி வேறு என்கின்றார்.
Forbes இதழில், அமெரிக்காவின் பணக்காரர்களை வரிசைப்படுத்தியிருந்தார்கள். அதில் முதல் ஐந்து பேர்களை எடுத்துக் கொண்டால், அதில் நான்கு பேர்கள் கல்லூரிப் படிப்பை முடிக்காதவர்கள். Paul Allen மட்டுமே MBA முடித்தவர்.
Gates, William Henry III
Buffett, Warren Edward
Allen, Paul Gardnerinvestments
Dell, Michael
Ellison, Lawrence Joseph
அதே சமயத்தில், ஒருவரிடம் அறிவும், செல்வமும் சேர்ந்து இருக்காது என்ற வகையிலே வள்ளுவர் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. செல்வந்தர் மற்றும் தெள்ளியர் ஆவதற்குரிய குணாதிசியங்கள் வேறு வேறு என்று மட்டுமே சொல்கிறார். இந்த இரண்டும் ஒருவரிடத்தில் இருப்பதற்குரிய வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
பெரிய செல்வந்தரானவர்களுக்கு எப்படி செல்வத்தை வைத்து செல்வம் திரட்டலாம் என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
நம்மைப் போன்றோர் மேற்சொன்ன செல்வந்தர்கள் போல் முயற்சிக்காமல் இருப்பதற்கு பலகாரணங்களில் ஒரு காரணம் துணிச்சல் இல்லாமையே. 5000 டாலர் நம்மிடம் அதிகமிருந்து, அதை தொழிலோ, பங்குச் சந்தையிலோ முதலீடு செய்யலாம் என்று எண்ணினால், துணைவியார் "எதுக்குங்க அந்த risk? நகையாக வாங்கிப்போட்டாலவது சேமிப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்" என்பார்கள் என்று சொன்னார் அன்பர் ஒருவர்.
வியாபாரம் என்றாலே ஏமாற்றுதல் என்கின்ற அளவிலே மக்கள் மத்தியில் ஒர் கருத்து இருக்கத்தான் செய்கின்றது. இது முழுமையான உண்மை கிடையாது. நேர்மையாகவும், நியாயமாகவும் வியாபாரம் செய்ய முடியும். ஆனால், நடைமுறையில் வியாபாரத்தில் ஏமாற்றுதல் என்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு (குறள் 375)
ஒரு கோணத்தில் பார்க்கும் பொழுது, நாட்டில் நோய் இருப்பது நல்ல விஷயம் இல்லைதான். அனால், மருந்து வியாபாரம் செய்பவர்களும், மருத்துவ வியாபாரம் (சேவையாக எண்ணாதவர்கள் மட்டும்) செய்பவர்களும் செல்வம் சேர்க்க அதுதான் வழி வகுக்கிறது.
நோய் தீயதானாலும், ஒரு சிலருக்கு நன்மைபயக்கிறது.
அதேபோல், கட்ரீனா மற்றும் ரீடா புயல்களினால், எரிபொருள் விலை உயர்ந்தது தீயதுதான். ஆனால், பல எரிபொருள் நிறுவனத்திற்கு இது ஒரு செல்வம் சேர்க்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. கட்டடம் கட்டும் நிறுவனங்களுக்கும் இது செல்வம் சேர்க்கும் நன்மையாகிவிட்டது.
மற்றொரு உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்தால் அங்கு வேலை செய்பவர்களுக்கு அது தீமைதான். ஆனால், பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் பங்கு உயர்ந்து பங்குதாரர்களுக்கு நன்மையளிக்கிறது.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (குறள் 377)
இக்குறளில், வகுத்தான் என்பதற்கு இறைவன் என்று பொருள் கொண்டால் உரை எழுதுவது எளிதாகிறது. இறைவன் விதித்தபடிதான் நாம் அனுபவிக்க முடியும் என்று பொருள் கொள்ளலாம். ஆனாலும், இந்த அதிகாரத்தில், இறைவன் என்று பொருள் கொள்வது சரியாக இருப்பதாகத் தெரியவில்லை.
அதே நேரத்தில், இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்தவகுத்தலுமான அரசன் என்று பொருள் கொண்டாலும் உரை எளிதாகிறது. ஆனால், இதுவும் முழு மனநிறைவைத் தருவதாக இல்லை.
திருக்குறள் முனுசாமி அவர்கள் சொன்ன உரை திருப்திகரமாக இருந்தது.
காமம் என்பது உணர்ச்சி. காமன் என்பது உருவகம்.
"நிலமென்னும் நல்லாள் நகும்" என்று வள்ளுவர் நிலத்தை "நல்லாள்" என்று உருவகப்படுத்தியுள்ளார்.
இது போலவே, ஊழ் என்பதை உருவகப்படுத்தி "வகுத்தான்" என்றே வள்ளுவர் சொல்லியிருப்பார் என்பது பொருத்தமாக அமைந்திருப்பதாகப்பட்டது.
துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால்
ஊட்டா கழியும் எனின்
இந்தக் குறளுக்கு பல உரையாசிரியர்களும், அன்பர்களும் பலவிதமான் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். எனக்கு மனதுக்கு சரியெனப்பட்டது இது. ஊழின் பெருவலியால், விரும்பிய பொருட்களும், அடிப்படைப் பொருட்களும் கிடைக்காமல் போகும் எனின், பொருளில்லாதார் துறவியாக மாறக்கூடும்.
மற்றொரு வகையில் சொன்னால், துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ண்மே எளிதானது அல்ல. அத்தகைய எண்ணத்தைக் கொண்டில்லாதாரும், துறவறம் மேற்கொள்ளும்படியான் நிலையினை ஏற்படுத்துவது ஊழ்.
(valluvar - kural - thirukkural)-நித்தில்